எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
எமைப்பார்த்து நகைத்துவிடும்!...நிற்கிறார் நிலைத்து என்றும் !!
01.!
எமைப்பார்த்து நகைத்துவிடும் !!
-----------------------------------------!
இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்!
தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்!
இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே!
இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !!
பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு!
துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்!
பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்!
காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !!
பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்!
கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்!
கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்!
பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !!
படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்!
பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை!
மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்!
நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !!
கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்!
போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்!
காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்!
மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !!
கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்!
கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்!
கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு!
காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !!
!
02.!
நிற்கிறார் நிலைத்து என்றும் !!
--------------------------------------!
சமயத்தின் சாறாய்நின்று சரித்திரம் படைத்த வள்ளல் !
இமயத்தின் உயரமாகி இகத்துளோர் மதிக்க நின்றார்!
சமயத்தை மட்டுமின்றி சமூகத்தை மனதிற் கொண்டு!
சன்மார்க்கம் உணர்த்திநின்ற சங்கரர் தாழ்கள் போற்றி !!
மாசறு மனத்தனாகி மாண்புறு செயல்கள் ஆற்றி!
பூசைகள் தாமுமாற்றி பூதலம் சிறக்கச் செய்தார்!
வாசனை பரப்பிநிற்கும் மறுவற்ற மலராய் நின்ற !
ஈசனின் தோற்றமிக்க எந்தையின் நாமம் வாழ்க !!
தெய்வத்தின் குரலைத்தந்து தீமைகள் அகன்றே போக!
வையத்தில் வாழ்ந்துநின்ற மாமணி அவரே ஆவர் !
சொல்லிலே சுவைகள் சேர்த்து சுருதியின் கருத்தும்சேர்த்து!
நல்லதைச் சொல்லிச் சென்ற நாயகன் நாமம்வாழ்க !!
நீண்டதோர் காலம்வாழ்ந்தார் நிமலனை மனதிற் கொண்டார்!
பூண்டநல் விரதத்தாலே புவியிலே புனிதர் ஆனார்!
ஆண்டவன் அவரேயென்று அனைவரும் தொழுது ஏற்ற !
அருங்குணங் கொண்டுநின்ற அவர்நாமம் என்றும் வாழ்க !!
இல்லறம் துறந்தயெந்தை ஏகினார் இறை தொண்டாற்ற !
நல்லறம் ஆற்றி நிற்க நயமுடன் பலதைச் சொன்னார்!
சொல்லறம் காத்து நிற்க தூய்மையைய மனதில் கொண்ட!
தொல்லறம் மிக்க எங்கள் தூயவர் நாமம் வாழ்க !!
ஊரெலாம் எந்தை சென்றார் உபதேசம் ஆற்றிநின்றார்!
பாரெலாம் பண்பு ஓங்கப் பாதங்கள் பதியச்சென்றார்!
வாரங்கள் மாதங்களாக மக்களின் இடத்தே சென்று !
வேதங்கள் சாரம்தன்னை விளக்கிய வள்ளல் வாழ்க !!
ஆற்றிய உரைகள் யாவும் அனைத்துமே வேதமாகும் !
சாற்றிய மேற்கோள் யாவும் தத்துவக் குவியலாகும்!
சேற்றிலே கிடந்த மக்கள் செழுமையாய் வாழவெண்ணி!
நாற்றென நின்ற ஆசான் நாமத்தைப் போற்றிநிற்போம் !!
ஆசியநாட்டில் தோன்றி அனைவரும் போற்ற நின்றார்!
பேசிய வார்த்தை எல்லாம் பெரும்பயன் பெற்றதாகும்!
காசினி உள்ளார்மீது கருணையைப் பொழிந்த வள்ளல்!
ஆசியை வேண்டிப் பல்லோர் அவரடிபணிந்தே நின்றார் !!
புத்தராம் யேசுகாந்தி புனிதராம் நபிகள் தோன்றி!
தத்துவம் உரைத்த நாட்டில் சங்கரர் தோன்றிநின்றார்!
அத்தனை பேர்க்கும் மேலாய் அவர்பணி ஓங்கிற்றென்று!
நித்தமும் நினைப்பதாலே நிற்கிறார் நிலைத்து என்றும் !!
எளிமையைச் சொந்தமாக்கி இனிமையை மனதில் தேக்கி!
தனிமையில் இறையைநாடித் தவநிலை கொண்ட வள்ளல்!
அழிவுடை எண்ணம்போக அறிவினை ஊட்டி எங்கும்!
நிறைவுடை மனத்தைநாட நின்றவர் நாமம் வாழ்க !!
இரா.சி.சுந்தரமயில்ரூபவ் கோவை