பிறகும் தொடரும் தீவின் மழை
எம்.ரிஷான் ஷெரீப்
மழை வெளி நிலத்தின் பட்சிகள்!
ஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்!
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்!
எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை!
மென்குளிரைப் பரப்பியிருக்க!
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம் !
நடந்து வந்த பாதையது!
தீவின் எல்லாத் திசைகளிலும் !
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும் !
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட!
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்!
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை !
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்!
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட !
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்!
இவ்வாறாக !
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு!
உன் சேமிப்பில் வந்தது!
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்!
புனித ஸ்தல மரமொன்றில் !
கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்!
வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை!
பொய்ப்பித்தே வந்தன!
சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும் !
நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள் !
நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா!
ஆனாலும் அப் பிரதேசத்துக்கும் !
அவை தினந்தோறும் வந்தன!
மழைத் திரை ஒரு நீர்க்கோடாய் !
அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது!
‘விதியில் எழுதப்பட்டவர்கள், !
சமுத்திரத்தில் வழி தவறி!
திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்!
முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’ !
என்றவர்கள் கூறியதை !
நீ குறித்து வைத்துக் கொண்டாய்!
தொலைதூரம் பறந்து சென்ற!
வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை !
ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்!
அதன் நிறத்தை, வாசனையை!
அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி!
மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும் !
‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்!
சிறிதும் கருணையேயற்று!
ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி!
பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்!
அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு!
கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்!
ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும் !
நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்!
ஈரத் துளி விழும் சப்தம்!
கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக