வேண்டாம் உலக.. நிறைவேறாத.. தமிழே
கிரிகாசன்
வேண்டாம் உலக வாழ்வு.. நிறைவேறாத காதல்.. தமிழே தருவாயா?!
01. !
வேண்டாம் உலக வாழ்வு!
---------------------------------------!
சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்!
சிவந்ததோர் மாலைவிண்ணின்!
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக!
அடங்காத திமிரெடுத்த!
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்!
மகிழ்வான குருவியாக!
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக!
எம்மையும் படைக்காத தேன்?!
நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,!
நில்லாமற் தடம்புரண்டு!
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்!
ஆழியென் றாக்கலின்றி!
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே!
தூரமென் றின்பங்கொண்டு!
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்!
கோலமும் ஏன் படைத்தாய்?!
குலையான கனியாக கூடிடும்கொத்தான!
குறுவாழ்வு மலர்கள்போலும்!
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக!
தன்மானங் கூனலிட்டு!
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு!
இழையவும் தளதளத்து!
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்!
பிறவியுந் தந்ததேனோ?!
கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்!
கீழ்மையில் சிந்தைவாட!
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்!
வானத்தின் திசைகாட்டிட!
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்!
நேரிலே உடலூதியும்!
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்!
வெற்றுடல் தந்ததேனோ?!
மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்!
மாதேவி சக்திதாயே !!
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான!
பிறவியாம் மனிதமென்றே!
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்!
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து!
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை!
வேண்டா மிவ்வுலக வாழ்வு!!
02. !
நிறைவேறாத காதல்!
-----------------------------!
நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்!
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்!
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி!
வெண்முகில் தாவிவந்தேன்!
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத் !
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு!
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி!
தேன்நிலாவில் தேடினேன்!
கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்!
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை!
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு!
அன்பில் அளிக்கவென்றே!
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது!
மின்னிய வெண்ணொளியில் - அங்கே!
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட!
துள்ளிக் கடந்து சென்றேன்!
மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்!
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்!
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது!
கையள்ளி நீர்தெளித்தேன்!
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள!
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்!
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்!
சேரமுடிய வில்லை!
தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்!
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்!
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று!
பக்கம் இழுத்துவைத்தேன்!
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்!
சொல்லை விழுங்கிநின்றேன் - அட!
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா!
ஒன்றிட ஒட்டிவைத்தேன்!
ஆனவகையினில் ஆகாதவேலைகள்!
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்!
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென!
ஏதும் புரிவ தல்லேன்!
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்!
தேடியலைந்து சென்றேன் - ஆயின!
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை!
வேடிக்கை காணாநின்றேன்!
கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்!
கன்னம் பழமெனவும் அவள்!
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி!
வேதனை பார்வைதரும்!
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்!
ஏனோ மனதிற் கொண்டாள் - இள!
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்!
வந்து அணைப்ப தெப்போ?!
!
03.!
தமிழே தருவாயா?!
-------------------------------!
தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்!
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்!
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்!
உனையென்றும் பிரியாமை வேண்டும்!
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக!
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்!
திகழின்பத் தமிழான தென்றும்நற் பொலிவாகி!
தினமொன்று கனிந்தாக வேண்டும்!
சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற!
சுகமான உணர்வென்றும் வேண்டும்!
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்!
அதுகண்டு புகழ்கூற வேண்டும்!
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்!
உனதன்பு அதைமேவ வேண்டும்!
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை!
எழுந்தின்ப நதிபாய வேண்டும்!
குவை தங்கம்,கொடி ஆட்சி, குடிவாழும்!
ஊரென்று எது தந்தும் பரிசாகக் கேட்டும்!
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்!
அதிகாரம் அதில் உண்டுபோதும்!
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்!
கலையன்னை மடிமீது சாயும்!
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்!
காணென்று மனம்கூற வேண்டும்!
ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக!
என்றென்றும் பிரகாசம் வேண்டும்!
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை!
இதனோடு இழைந்தோட வேண்டும்!
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி!
தருகின்ற கவியாவும் என்றும்!
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி!
வழுவாத நிலைகொள்ள வேண்டும்