நல்லதோர் வீணை.. புயலுக்கு பிந்தைய
ப.மதியழகன்
01.!
நல்லதோர் வீணை செய்தே... !
-----------------------------------!
கவிதைகளால் கட்டிய கல்லறை!
கல்லறைச் சமீபமாய்!
ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும்!
அவன் குரல்!
வீட்டில் அவனுடைய சிறு அறையில்!
எண்ணற்ற வெள்ளைக் காகிதங்கள்!
அவன் கவிதைகளை எழுதியவுடன்!
கனக்கக் கண்டிருக்கிறேன்!
கல்லூரிக் காலங்களில்!
அடைந்துவிட்ட சுதந்திரத்தைப் பற்றி!
ஆர்ப்பரிக்கப் பேசுவான்!
பாரதி கண்ட சுதந்திரம்!
இதுவல்லவென்று!
காதலியிடம் ஸ்நேகமிருந்தால்!
சிறுநகத் தீண்டல் கூட!
பேரின்பம் என்பான்!
முக்தி பெற்று!
கோவில்களில் சிலைகளாயிருக்கும்!
தெய்வத்தில் ஒன்று!
என்முன் வந்து வாழ்கிறது!
அதுவே என் அம்மா என்பான்!
விடியலிலிருந்து!
தபால் நிலைய வரிசையில் நின்று!
விண்ணபபம் வாங்கி வருவான்!
வேலைதேடும் நண்பனுக்காக!
காதல் யுத்தத்தில்!
அபிமன்யூவாக நான்!
கெளரவராக நீ - என்ற!
அவன் கவிதை மெய்யாகிப் போனது!
பத்ம வியூகத்தில் சிக்கி!
உயிரிழந்தான்!
இன்னும் அவனுடைய இதயம்!
கல்லறையில் உறங்காமல்!
துடித்துக் கொண்டேயிருக்கிறது!
காதலித்த நாட்களில்!
அவன் எழுதிய காதல் வேதங்கள்!
இன்று கடற்கரை மணலில்!
சுண்டலைச் சுமந்து கொண்டிருக்கிறது. !
!
02.!
புயலுக்கு பிந்தைய இரவு !
----------------------------!
பெண் பெயரை வைத்ததாலோ!
என்னவோ!
இவ்வுளவு காலமாய்!
தன் உள்ளத்துக்குள்ளே வைத்துக்!
குமுறிக்கொண்டிருந்த!
அடக்குமுறைகளும், அவமானங்களும்!
எண்ணச் சுழற்சியாக உருக்கொண்டு!
கடலின் நடுவே மையம் கொண்டு!
சூறாவளியாய் சுழன்றடித்து!
உலகை மிரளவைத்துக்!
கரை கடந்தது!
பிரதேசமெங்கும்!
விசும்பல்கள், முனகல்கள், அழுகைகள்... !
வீடிழந்தவர்கள்,!
பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள்,!
உறவுகளை தொலைத்தவர்கள்...!
இவர்களனைவரும் தற்காலிகமாக!
தங்க வைக்கப்பட்டுள்ள!
பள்ளிகளில்!
தாய்மையின் கண்ணீர்ப் புலம்பல்கள்!
காற்றலைகளில் பரவிக்கிடக்கிறது!
புயலுக்குப் பிந்தைய இரவுகளில்... !
பேரழிவைத் தடுத்திட வேண்டுமென்ற!
உள்ளக்கிடக்கையைவிட!
வேறு ஏதும் செய்ய ஏலாத!
கடலன்னை வடித்த!
கண்ணீர்த்துளிகள் கடலுடன்!
கலந்து நுரைக்கிறது