சிலுவையில் அறைந்த இறைவனும் எழுந்து
உயிர்பெற்று வந்தது ஒரு தடவை!
கோடரி துண்டாடி மனிதர்கள் கொண்டாட
பலமுறை துளிர்க்குது மரக்கடவுள்!
பஞ்சம் பிழைக்க வந்த கொஞ்சும் குருவியிடம்!
கனியை லஞ்சமாக்கி விதையை விருட்சமாக்கும்!
விவேக ஆலமரம் பாரதத்தின் தேசமரம்!
உதிக்கின்ற ஆதவனின் உஷ்ணத்தை உள்வாங்கி
உழைக்கின்ற மக்களுக்கு நிழல்கொடுக்கும் புங்கைமரம்!
வாழ வழிவகுக்கும் தந்தையின் சுடுசொல்போல்!
ருசியில் கசந்தாலும் மருந்தாகும் வேப்பமரம்!
கால்வெட்டிக் கொலைசெய்தும் கழுவேற்றி வதம்செய்தும்
வரவேற்று மங்களமாய் வாழவைக்கும் வாழை மரம்!
மேற்குத் தொடர்மலையின் வேகக் காற்றினையே
தேகத்தால் அரணமைத்து மேகமாக்கும் மலை மரங்கள்!
வழங்கவே உருவெடுத்த இயற்கையின் வளமே!
பாரி காரி ஓரிக்கும் இல்லையுன் குணமே!
மரமே! மரமே! மரமே! மரமே!
மனமெங்கும் மணக்கட்டும் நின்புகழ் தினமே!