தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிறகு தா தெய்வமே

முனைவர். கிறிஸ்டி ஆக்னலோ
சிறகு தா தெய்வமே......
என் உறவின் நிழல் தேட.
நான் வாழ்வேன் என்று நினைத்தால்
வீழ்ந்து போனேன் பல தருணம்...
வீழ்ந்தேன் என்றெண்ணினால்...
வாழ்வு வந்தது வசந்தமாய்.
வாழ்ந்தே விட்டேன் என்றால்...
வழி இல்லா வாழ்வாய் ஆனது.
வாழ்வும் நீ... வளமும் நீ...
என்றுனை நாடினால்...
நீயோ சொன்னாய்...
நீ போன பாதையில்,
நான் இல்லை என் பகை உண்டு.
உன் நிலை நீ தேடியது என்று,
உன் உரை முடித்தாய்,
என்னை தனியே இங்கு தாளம் இல்லா
பாடல் போல ஆக்கி சென்றாய்!
நான் உண்டு என் பாடல் உண்டென்று வாழ நினைத்தேன்
பாடகன் வந்தான்,
பாடுவேன் வா என்றான்...
பல மெட்டு போட்டாலும்,
என் பாடல் அவன் பாட தாளம்
இல்லா பாடல் ஆகி விட்டது.
மெட்டுகள்... பல தாளம்...
தருவான் என்றான்... தனியே....
தளர்வுடன் விட்டு செல்வான்...
என்று நினைக்க செய்தாய் நீ.
என் நினைவுகள் உன் வரம் தானே.
மதிக்க நான் உண்டு உன்னை,
மதியில் கூட நினைக்க
யார் உண்டு என்னை.......?

வாழ்வும் வீணாகும் வார்த்தையில் வீழ்ந்தால்

முனைவர். கிறிஸ்டி ஆக்னலோ
தரம் இல்லா மனிதனிடம் தரம் தேடும் உன்னை
இன்னார் என்றெண்ணாது உலகம்.
போலி அன்பு பொய் வார்த்தைகளால்
புண்ணாக்கும் உறவை,
மாற்றி பேசி வார்த்தை தேடி உன்னை வீழ்த்தும் உறவு
உனக்கு ஒரு எரி-நகரம்...
உன் நினைவை விரித்து அதை சிறகாக்கி
பறந்திடு என் மனமே!
உன்னை எரிக்க நினைக்கும் அளவு
நீ தரம் குறைந்தால்...
தங்கமும் வீண் தான்...
தரணியில் உன் வாழ்வும் வீண் தான்...

காதல் கணக்கு!

இரா சனத்
அங்கும் இங்கும் கடன் பட்டு!
அன்பு எனும் மூலதனமிட்டு!
ஆரம்பித்தேன் அவள் மனதில்!
ஓர் புதிய காதல் கணக்கு!
நித்தம் நித்தம் சேமித்தேன்!
நிலையான வைப்பு செய்ய!
நிலைமாறி போனது வங்கி!
நிம்மதியற்று போனது வாழ்க்கை!
முதலீடு செய்ய செய்ய இஷ்டம்!
அதை மீளப்பெறுகையில் கஷ்டம்!
காதல் கணக்கே ஓர் நஷ்டம்!
வேணடாம் இனி இக் காதல் திட்டம்

மனைவி!

இரா சனத்
அன்னைக்கு இணையாக!
அறிவுக்கு ஒளியாக!
அன்பு செலுத்த வரும்!
அழகு தேவதை அவள்!
உறவுகளை விடுத்து!
உடமைகளை வெறுத்து!
உனக்காகவே வாழும்!
உண்மை ஜீவன் அவள்!
உன் தேவைக்காக!
உறக்கத்தையே இழந்து!
உன் தாகத்தை தீர்க்கும்!
உன்னதமான உறவு அவள்!
தோல்வியில் ஏணியாய்!
தத்தளிப்பில் தோணியாய்!
நின்று தோல்கொடுக்கும்!
வாழ்க்கைத் தோழி அவள்!
தனிமையில் வாழ்ந்த நீ!
தாரகையின் வருகையால்!
தன்னிறைவு அடைந்தாய்....!

அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை...

ரஜினிகாந்தன்
ஒருகட்டு கருப்பங்கழி
காய்வெட்டா வாங்கிவந்த
பூவன்பழம் நாலுசீப்பு
கூடவே
ரெண்டண்ணம்
இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து
கடன்சொல்லி வாங்கிவந்த
பூணம் பொடவை ஒண்ணும்
பூப்போட்ட கைலி ஒண்ணும்
வரிசைப்பணம் அம்பதும்
வடக உருண்டை பொட்டலமும்
என
அம்மா அனுப்பிவைப்பாள்
அக்காவுக்கு
பொங்கல் சீர்

உந்திப் பெடல்மிதித்து
சந்தோஷமாய்
சைக்கிளேறிப்போகும்
என்னை
தெருமுனையில் திரும்பும்வரை
கையசைத்து
பின்மறைவாள்

ஆறுமைலுக்கு
அப்பாலிருக்கும்
அக்காவீடு போவதற்குள்
தெப்பலாய் நனைந்திருப்பேன்
தேகமெல்லாம்
வியர்த்திருப்பேன்

தெருமுக்கு கடைநிறுத்தி
தின்பண்டம் கொஞ்சம்
மயிலாத்தாவிடம்
பேரம்பேசி
மல்லிப்பூ ரெண்டுமுழம்
என
என்பங்குக்கு கொஞ்சம்
சீர்வரிசைப்பைக்குள்ளே
சேர்த்தே
எடுத்துப்போவேன்

'' வாடா'' தம்பியென
வாஞ்சையோடு அழைக்கும்
அக்காவின் வீட்டுக்குள்
வெரால்மீனு கொழம்பும்
மசால்வடையும்
மணக்கும்

எப்படியும் வருவான்
தம்பியென
கெவுளிச்சத்தத்தை வைத்தே
கணித்துசெய்திருப்பாள்
அக்கா

பனைவிசிறி தந்துவிட்டு
மோரெடுத்துவர
உள்ளறைநோக்கி ஓடும்
அக்காவுக்கு
பிறந்தவீட்டு சீரைக் கண்டு
பெருமை
பிடிபடாது.

பாக்கு இடிக்கும்
மாமியாக்காரி
பார்க்கட்டும் என்பதற்காகவே
தெருத்திண்ணையிலேயே
பரத்திவைப்பாள்
பிறந்த வீட்டு
சீதனத்தை.

"இந்த
இத்துப்போன வாழைக்காயத்
தூக்கிட்டுத்தான்
இம்புட்டுத்தூரம்
வந்தானாக்கும்"
என்னும்
நக்கலுக்கு வெகுண்டு
நாசிவிடைக்க
கிளம்புகையில்
பதறிஓடிவந்து
பாதையை மறிப்பாள்
அக்கா.

வரிசைப்பணத்தைக்
கையில்திணித்துவிட்டு
"வர்றேன்க்கா" என்ற
ஒற்றைச்சொல்லுக்கு
ஓலமிட்டு
அழுவாள்

அழுகை அடக்கி
சிரிக்கமுயன்று
கண்ணீர்மறைத்து
கவலை விழுங்கும் அக்காவை
இன்றுநேற்றா
பார்க்கிறேன்

வரிசை குறித்த
வாக்குவாதங்கள்
வருடந்தோறும்
அரங்கேறியபடிதான் இருக்கும்
அக்காவின்
புகுந்தவீட்டில்

சைக்கிள்தள்ளி
விருட்டென ஏறிமிதிக்கையில்
"வெறும்பயக் குடும்பத்துக்கு
வீறாப்புக்கு கொறச்சலில்லே"
என்னும்
குத்தல் வாசகம் கேட்டு
உச்சிவெயில்கணக்காய்
உள்ளம்
கொதிக்கும்

வெரால்மீனுகொழம்பும்
மசால்வடைவாசமும்
தெருமுனைவரை
என்னை
துரத்திவந்து
பின்மறையும்

உச்சிவெயிலில்
ஆவேசங்கொப்பளிக்க
பசித்தவயிறோடு
திரும்பும் நான்
எப்படிக் கேட்கமுடியும்
அக்காவிடம்
அம்மா கேட்டனுப்பிய
சாயம்போன இரவிக்கை
இரண்டும்
கட்டிப் பழசான
சேலை ஒன்றும் ?

எழுதாத ஒரு கவிதை

தமிழ் அழகினி
ஆசைகள் எழுகின்ற போதெல்லாம்
பார்க்கிறேன் - அதில்
உன்னை முழுவதும் இரசிக்கிறேன்.......
நேரில் வரும்போதெல்லாம்
சிலிர்க்கிறேன் - அந்த
மயக்கத்தில் மாயமாக மறைகிறேன்........
உடன் இருக்கும் போதெல்லாம்
கரைகிறேன் - அதில்
உன் மேனிதொட்டு உரைகிறேன்........
உறக்கத்தில் இருந்த போதெல்லாம்
காண்கிறேன் - அவை
கலையாமல் இருக்க துடிக்கிறேன்......
நினைத்திடும் போதெல்லாம்
மகிழ்கிறேன் - அந்த
சுகத்தை நினைத்து வாழ்கிறேன்......
ஆனால்,
எத்தனை எழுதினாலும்
எப்பொழுது எழுதினாலும்
முடியாத கவிதையாய் இருக்கிறாய்
என்னுள்
எழுத முடியாத கவிதையாய் இருக்கிறாய்.......

சக்கை நான்- சாறு நீ

இரா . அரி
என்னை உதைக்காதே
என்று கத்தினேன்
என் மீது ஏறி
இலக்கை அடைந்தவுடன்
கீழ்நோக்கினாய் ...
ஏதோ ஒரு ஏளனப் பார்வையுடன்...

சக்கை நான்
சாறு நீ
வழி உனக்கு
வலி எனக்கு
விலகிப் போனாய்
அது உன் விருப்பமன்றேன்...

நான் பயன்பட்டேன்
நீ பயணப்பட்டாய்...

வளர்ந்து நின்று
வாழ்ந்திருப்பாய்
என்று நினைத்திருந்தேன்
ஆனால்
எரியூட்ட வா என்று
உன் சொந்தங்கள் அழைக்கிறது
ஏணியாய் இருந்த என்னை...
ஆனால்
ஏனோ-என் மனம் வலிக்கிறது.

சிவப்பு கம்பளம்

இரா . அரி
உன் பாதையில்
நீ செல் ....

உன்னை தேடிவரும்
மானிடருக்கு
ஆலோசனை சொல் ...

உன்னை மதிக்கும்
சிலருக்கு சிவப்பு
கம்பளம் விரி....

ஆனால்

உன்னைப் போலவே
மாறவேண்டும் என்று
ஒருநாளும் நினைத்திடாதே ......

நீ- நீயாக இருக்க
நினைக்கும்போது
அடுத்தவர் ஏன் ?
உன்னைப்போல மாறவேண்டும்
என்று நினைக்கிறாய் ....

உன்னை மாற்றிகொள்
நீ நிலவாய்
காட்சி தருவாய்
பிறரை மாற்ற நினைத்தால்
உன் மார்பிலே
நீயே குத்திக்கொள்ளும்
கத்தியாகிறாய் .

வண்ண மயில்

இரா . அரி
மழைவிட்ட
பொழுதில்
தோகை விரிக்கும்
வண்ண மயில்போல ...
விண்ணில்
காற்றோடு
பறக்கும்
வண்ண
துப்பட்டா
வானவில்லாய்
தோன்றி மறையுதே.

விழிநோக்கும் தூரத்தில்

இரா. அரி
விழிநோக்கும் தூரத்தில்
நிலவொளியில்
நீ சிரித்தாய்
விண்மீனைப் போலத்தானே
உன் அருகில்
நீ அழைத்தாய்....

அலையாத்திக் காடுபோல
உன் கூந்தல்
அசைந்தாடி அழைக்குதடி

அலைமோதும் கரையைப்போல
உன் பார்வை -எனைத்தேடி
அழையுதடி

நீயென்ன அயல்தேச
ஏஞ்சலா இல்லை எனை
ஆட்டுவிக்கும் ஊஞ்சலா..

உனைப்பார்க்க
நானும் வந்தேன்
தெப்பத்தேரில் தேவதையாய்
தெய்வம்தந்த காதலியாய்...

விழிநோக்கும் தூரத்தில்
எனைச் சுமந்து செல்கின்றாய்
தெப்பத்தேரின் பேரல்போல
எனைச்சுமக்க வந்தவனே
எனைச்சுமந்து செல்கின்றாய்..

உன் இதயம் நனைந்த
தெப்பமாய்
நம் காதல் நனைந்து
செல்லுதே
அந்தக் காட்சியைக்
கண்டு கடவுழும்
கொஞ்சம் பூமழை
பொழியுதே

தெப்பத்தேரின் தேவதையே
என் தேகமுழுக்க வந்துவிடு
என் வாழ்கை முழுதும்
வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு வாழ்ந்தூவிடு