அறியா உலகின் அறிமுகம்....
பயம் நிறைந்த வாழ்வில் தைரியம்...
இன்னார் என்று சொல்லிக்கொள்ளும் அடையாளம்....
எனது பெயரின் முதல் எழுத்து...
எனது கதையின் நாயகன்....
எனது முகச்சாயலின் அசல்....
எனது வாழ்க்கையின் வழிகாட்டி....
காலத்தின் அருமை சொல்லும் நாள்காட்டி....
உழைப்பிற்கு இலக்கணம்....
தியாகத்தின் சிகரம்.....
அறநெறி கூறும் இலக்கியம் ....
நான் படித்து முடிக்காத புத்தகம்.....
குடும்பத்தின் சுமை தூக்கி....
கடமை மாறா கண்ணியம்.....
வலிகள் தாங்கும் கவசம்....
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்....
என்றும் எனது பாதுகாவல்...
பொய்க் கோபக்காரர்....
மெய் பாசக்காரர்....
நான் நேரில் கண்ட தெய்வம்....
ஆசையை காட்டி கொள்ளாதவர்....
பாசத்தை காட்ட தெரியாதவர்....
தோற்றத்தால் எளியவர்....
மாற்றத்தால் முதியவர்....
பல்கலைக்கழகங்கள் கற்பிக்க முடியா பாடம்.....
திரைகடல் ஓடியும் கிடைக்காத திரவியம்.....
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகுவர்த்தி......
தேவைக்குப் பணம் தரும் உன் சட்டைப் பை ஏடிஎம்,
தேவையில்லாதது என தெரிந்தால் உன் முரட்டு கை பதம் பார்த்திடும்.....
வெளியூர் சென்று வந்தாள் பலகாரக் கடை கூட வரும்....
திருவிழா என்று வந்தால் வண்ண உடை வீடு வரும்......
உனக்கேதும் நோவுணா இஞ்சி சாறு மட்டும் குடிச்சி குட்டித்தூக்கம் போட்டெழுவாய்.....
எனக்கேதும் நோவுணா டவுன் பஸ் ஏறி டாக்டர்ட கூட்டி போவாய்....
உன் கை காய்ப்பு சொல்லும் எனக்காக நீ பட்ட பாடு.....
இத்தனைக்கும் எதை செய்து தீர்ப்பேனன் நான் பட்ட கடன் நூறு....
ஐந்தில் அறிந்து கொள்ளாத உன் பாசம்....
பதினைந்தில் புரிந்து கொள்ளாத உன் தியாகம்.....
பின் ஐந்தில் தெரிந்து கொள்ளும்போது கிடைக்காது உன் சுவாசம்....
எத்தனையோ இருக்கு ஆயுள் காப்பீடு......
அத்தனையும் தகுமா உன் இழப்பிற்கு ஈடு....