ஆடியில ஏர்புடிச்சு மாடுரெண்டு வய உழுக;
கெடபோட்ட மண்ணுக்குள்ள மண்புழுக்கள் நடைபழக;
மக்கிப்போன குப்பையெல்லாம் நுண்ணுயிரி உரமா மாத்த;
சேத்துவச்ச சொந்த விதை பொறந்த மண்ணில் வெதச்சது போய்..!
மிஞ்சிப்போன வெடிமருந்த கஞ்சிபோட்டு சலவை செஞ்சு;
யூரியான்னு பேர வச்சான் மாறிப்போச்சு விவசாயம்..!
கருடஞ் சம்பா மாப்பிளச் சம்பா மட்டை கவுனி குழிபறிச்சான்;
லட்சவகை தமிழர் நெல்லும் செயற்கை உரம் சாரலயே..!
பலவகைய கலந்துவச்சு கற்பழிச்சுப் புதுவகையா;
பொன்னியின்னு பேரவச்சு வெடிமருந்தில் வெளைய வச்சான்..!
வெளிநாட்டில் விதை வாங்கி வெளஞ்சதெல்லாம் மலட்டு வெத..!
மறுபடியும் வெளைய வைக்க கைய ஏந்தும் ஆட்டுமந்த..!
பூச்சி மருந்து களைக்கொல்லி உணவே இப்ப உயிர்க்கொல்லி..!
இந்த சோகக் கதையச்சொல்லி சோர்ந்துபோச்சு மனசும் தள்ளி..!
பாழாப்போன வழிமுறைக்கு பசுமைப்புரட்சி புகழாரம்..!
வரவிருக்கும் தலைமுறைக்கு நரகவாழ்வின் அச்சாரம்।
சுதர்சன் கா