எங்கு போனீர்கள் இங்கு நாம்
சுபேஸ்
எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....!
-------------------------------------------------------------!
மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்!
முடிந்தோடி விட்டாலும்!
நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்!
நெருப்பெரிக்கும் நினைவுகள்!
ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது!
உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்!
தோற்றுப்போன நாட்களின் -மாறாத்!
தொடரும் உயிர்வலிகள்!
மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்!
மரணித்த தேசத்தில்!
இன்னும் புல்பூண்டு-முளைத்து!
இயற்கை சிரிக்கவில்லை!
கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்!
கண்ணகி எரித்தகதை!
இன்னும் சரித்திரத்தில்-படிக்க!
இலக்கியப் புத்தகத்தில்!
எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்!
எங்கள் தேசத்தில்!
மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்!
இன்னும் எரியவில்லை!
வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு!
வளர்த்த கடாவெட்டி!
புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்!
பூவிழந்து போயினரே!
கொழுத்த அரக்கர்கள்-எங்களை!
கொன்று புதைக்கையிலே!
பழுத்த தேவர்கள்-ஞானப்!
பால் குடிக்கப்போயினரோ!
கற்பூரச் சட்டிகளை-கைகளில்!
கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்!
கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்!
கண்மூடிச் சயனத்திலோ!
சூரனை வதம்செய்ய-தேவர்களைச்!
சூழ்ந்த துயர்துடைக்க!
கையில் வேலெடுத்த-காக்கும்!
கதிகாமக் கந்தனே!
வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்!
வரம்தரும் முருகனே!
நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த!
நயினை நாகபூஷனியே!
இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்!
பல்கிப் பெருகிநிற்கும்!
எங்கள் தமிழர்கள்-நம்பிய!
ஏராளம் சாமிகளே!
செத்துக் கிடக்கையிலே-எம்முடல்!
தீயில் எரிகையிலே!
வன்னியின் வானம்விட்டு-நீங்கள்!
வனவாசம் சென்றீரோ!
செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி!
செங்குருதி தெறிக்கையிலே!
கத்திய கூக்குரல்கள்-உங்கள்!
காதில் விழவில்லையோ!
தாயை இழந்ததினால்-காட்டில்!
தவித்த குட்டிகட்காய்!
பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்!
பாலூட்ட வந்தசிவன்!
செத்த தாய்முலையில்-எம்குழந்தை!
ரத்தம் குடிக்கையிலே!
முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்!
மூழ்கிக் கிடந்தீரோ!
இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்!
இரந்து கிடக்கையிலே!
எங்குநீர் போனீரோ-இன்று!
பொங்கலுக்கு வந்தீரோ!
கொலுவுற்று எதற்காக-இன்னும்!
கோவிலில் வீற்றிருந்து...?!
வலுவற்ற கற்களுக்கு-யாரும்!
வாழ்வு கொடுக்காதீர்!
இன்னும் எதற்காக-கோவிலில்!
பென்னம் பெருஞ்சிலைகள்!
எல்லாம் மண்ணாக-எம்!
சாபம் பலிக்கட்டும்!
சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்!
சீரழிவு இனியுமில்லை!
கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்!
கடவுள் எவனுமில்லை