ஹேய் தூக்கணாங்குருவி
காருண்யன்
காருண்யன்- !
ஹேய்........ ஹேய்....... தூக்கணாங்குருவி !
நீ நின் கூட்டைக் கட்டுவதில் கவனங்கொள் !
உன் மூதாதையர் உனக்களித்த !
பரம்பரை அலகுகளில் சுமந்துவந்த !
வீடுகட்டும் கலை ஞானத்தால் !
உன் அழகிய வீட்டைக்கட்டு !
உன் எளிய அழகிய வீட்டில் !
நின் முன்னோர்களைப்போலவே !
காதலையும் சந்தோஷத்தையும் !
ஆரவாரத்தையும் பரவவிடு! !
மனிதர்களிடம் பணம் என்றொரு பொருளுண்டு !
மானுஷீகம் , தர்மம், சமூக நேயமென்ற அவர் நேசமிக்க !
உறவுகளுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. !
ஒருவருக்குப் போட்டியாக ஒருவர் !
இரண்டு நாலு பத்தென்று !
மனிதர்கள் பணமுடுக்கிக் கட்டும் வீடுகள் !
ஒருகணம் உனக்கு உயர்ந்தனவாய்க்கூடப்படலாம் !
துரோகம் முகமூடி அரிதாரம் ஒப்பனைகள் !
காம குரோத அகங்காரப் பேய்களோடும் !
குடிகெடுக்கும் சாத்தான்களோடும் !
வாழப் பழக்கப்பட்டவர்கள் !
அறமற்றுத்தேடிய பொருட்களைப் பதுக்கவும் !
சதித்திட்டங்கள் தீட்டிப் பிறரை வாரவும் அவர்கட்கு!
பல இரகசிய அறைகள் தேவை !
!
இரண்டு வீடுகள் கட்டிக்கொண்ட !
தூக்கணாங்குருவியை என்றாவது உலகம் அறிந்ததுண்டா? !
உன் இனம் எண்ணிறந்த தலைமுறையாக !
விரும்பிய இடத்தில் வேண்டிய நேரத்தில் !
தன்கூட்டைச் சுதந்திரமாக கட்டுவதைப்போலவே !
தென்றலும் வெளிச்சமும் தானாக !
உள்வரும் எளிய மிருதுவான !
உன் நுட்பமான கூட்டைமாத்திரம் பின்னு !
தினமும் சங்கீதமும் ஆனந்தமும் பொங்கும் !
உன் குதூகலமான வீட்டினுள் !
பேராசை மனிதரைப் பார்த்து !
வேறெதையும் உள்நுழையவிட்டிடாதே !
ஒரு மனிதனாகச் சொல்கிறேன்; !
கட்டிடக்காட்டுக்குள் மனிதத்தையும் நிம்மதியையும் !
தொலைத்துவிட்டு அலையும் என் !
இனத்தைப் பார்த்து உன் வீட்டை மாற்றியமைத்து !
இயற்கை வரமான உன் நிம்மதியைத தொலைத்துவிடாதே !
என் இனிய பட்சியே சிறிய சிநேகிதனே !
உன் அழகான தனித்துவமான !
கூட்டைக்கட்டுவதில் மாத்திரம் நீ கவனங்கொள்! !
!
16.04.2002 ----- பேர்லின்