கவி ஆக்கம்: அகரம் “அமுதா” !
ஒற்றைக் காலில் நின்றபடி !
உன்னை என்னை பார்த்தபடி !
சற்றே காற்றை கிழித்தபடி !
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன? !
நிலையே இல்லா இவ்வாழ்வில் !
நிலைத்து வாழ வேண்டுமென்று !
நில்லா துழைத்தல் வேண்டுமென்று !
நிற்கும் பம்பரம் சொல்கிறது! !
ஊனம் உடலில் இல்லையென்றும் !
உள்ளத் தில்தான் உள்ளதென்றும் !
காணும் பேரைக் கூப்பிட்டு !
கனிவுடன் பம்பரம் சொல்கிறது! !
வட்டத் துள்ளதை சிறைவிடுத்து !
வாழ்வளித்திடும் தன்னைபோல் !
இட்டமுடனே இல்லார்க்கு !
இயன்றது செய்திட இயம்பிடுது! !
தலைக்கனம் கொண்டு ஆடுவதால் !
தாழ்வே வந்து சேருமென்று !
தலையை ஆட்டித் தக்கபடி !
தன்மையாய் பம்பரம் சொல்கிறது! !
தன்னைச் சுற்றும் சாட்டடைக்கே !
தன்னை வழங்கும் பம்பரம்போல் !
உன்னை சார்ந்த உறவுக்கு !
உன்னை ஈந்திடு என்கிறது! !
சொந்தக் காலில் நிற்பதுதான் !
சுகத்திற் சிறந்த சுகமென்றும் !
அந்தப் பம்பரம் சொல்கிறது !
ஆழகாய் நிமிர்ந்து நிற்கிறது! !
!
கவி ஆக்கம்: அகரம் “அமுதா” !
தொடர்பு:006592468200