மறைந்தவள் அவள் நிறைந்தவள்
வே .பத்மாவதி
முதன்முதலில் பார்த்தபோது மகிழ்ச்சி !
மனம்முடிந்த பின்புஏதோ கிளர்ச்சி!
கைபிடித்த கல்யாணநாள் -பின்!
காதலில் பலநாள் மோதலில் சிலநாள்!
அடுக்களையில் அன்றொரு நாள் -நீ!
அறியாமல் அவசரம் கொண்ட நாள்!
அலறினாய் தீ கொஞ்சம் பட்டதால்!
அதிர்ந்தேன் உன் கை சற்றே சுட்டதால்!
அதனால் உன்னை நானும் எரிக்காமல்!
அலுங்காமல் உன்னுடல் குலுங்காமல்!
அனுப்பி வைக்கிறேன் மனம் பொறுக்காமல்!
முதல் நாள் கிடைத்த ஊதிய உயர்வு!
மூக்குத்தி வாங்கலாம் என்ற உன் கனவு!
மூடிவைத்தானா எமன் அவன் வரவு!
முடிந்தே போனதே எந்தன் நினைவு!
மின்சார மயானத்திற்க்கே அந்த செலவு!
சேலை வாங்கச் சென்றால் சீறுவேன்!
சிக்கனம் கொள் என்றே சினமுறுவேன்!
சிரித்தாலும் சிலநேரம் முறைப்பேன்!
சேலை வாங்கி வந்து விட்டேன்!
பிடிக்கிறது என்றே சொல்வாயா!
சொல்லாமல் சொர்க்கம் சென்றதற்கு!
மன்னிப்புக் கொள்வாயா!
ஒருவேளை நான் மடிந்திருந்தால்!
ஒவ்வொன்றாய் வளையல் உடைத்திருப்பாய்!
கட்டிய தாலி தனை கழட்டி இருப்பாய்!
பூவும் பொட்டும் இழந்திருப்பாய்!
இவ்வுலக வாழ்வையே துறந்திருப்பாய்!
வாழ்விலும் சாவிலும் உடன் இருப்பேன்!
வார்த்தை சொல்லியே வலம் வந்தேன்!
உன்னை பிரிக்கத் திட்டம் இட்டான்!
உடன்கட்டை தடுக்க சட்டம் இட்டான்!
உன்னுடன் வந்தால் உயர்ந்தவன் பட்டம் இடுவான்!
வந்த நாட்கள் முடிந்தது வாழ்வில்!
வரும் நாட்கள் கலந்திருப்போம் சாவில்