இரவும் பகலும் இரத்த ஆற்றிலே!
எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது!
உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம்!
செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது!!
எமக்காக எழுந்த தெய்வங்களே!
ஏழு பேரையும் வணங்குகிறோம்!
ஒரு சோதிப்பெரு வெளிச்சம்!
எமக்குச் சக்தியானது போதுமையா!!
முகம் தெரியாத எம் முத்துகளே!
உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள்!
எழுத்தாணியைக் கையில் எடுத்து!
எட்டுத் திசையிலும் எழுதுங்கள்!!
உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு!
உங்கள் உயிர்களை இழக்காதீர்கள்!
அவலத்தின் காணொளிகளை தொகுத்து!
உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்!!
தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை!
இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்!!
நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே!
நெஞ்சுடைந்து நெகிழ்ந்து போகின்றோம்!!
நிலவெறியும் எங்கள் வீடுகளில்!
நெருப்பெறிந்தால் எப்படித் தாங்குவோம்!
அடுத்து அடுத்து தற்கொடைகள் என்றால்!
அடியெடுத்து விடைகொடுப்பது யார்?!
உங்கள் ஓப்பற்ற தியாகங்களின்!
பின்னே மெல்ல மறைந்து போகும்!
உங்கள் குடும்பத்தின் ஒப்பாரிகள்!
எழுந்து வந்து உயிர்க்குலை அறுக்கிறது!!
கதறி அழுது கண்ணீர்விட்டு அழுது!
அடக்க முடியாத உணர்வுகளில்!
தேடி வந்து சோகம் ஒட்டிக்கொள்கிறது!
இறுதி முடிவுகளே இங்கே தொடக்கமாகிறது!!
அங்கே முத்துக்குமார் எழுதி முடித்த!
மரணசாசனத்தை தினமும் வாசிப்போம்!!
இங்கே முருகதாசன் எழுதி வடித்த!
மரணசாசனத்தை உடனே வாசிப்போம்!!
தீக்குளிப்பை ஆதரிக்க முடியாத எங்களால்!
தீக்குளித்தவனை திட்டித் தீர்ப்பதற்கோ!
விமர்சனம் செய்து பழி தீர்க்கவோ!
எங்களில் எவருக்குமே உரிமையில்லை!!
வசீகரன்