தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விதி

கலாப்ரியா
 அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

விருப்பமின்றியே வந்து ஒட்டிக் கொள்கிறது நிழல்!

ப. மதியழகன்
விடைபெறும் நேரம் வரும்வரை!
உன் பிரிவைப் பற்றி!
நினைக்கவே இல்லை!
ஏகாந்தமாய் வாழ்ந்தவனின்!
வயிறு பசி என்பதை அறியாது!
குறிப்பிட்ட நபர்களை!
எதிர்கொள்ளும் போது!
என்ன செய்வது என்று தெரியாமல்!
சிலை போல் நின்று விடுகிறேன்!
வெளிப்படுத்தப்படாத எண்ணகளை!
சுமை தாங்கி போல் முதுகில்!
சுமந்து செல்கிறேன்!
உங்கள் விருப்பமின்றியே!
வந்து ஒட்டிக் கொள்கிறது!
நிழல்!
நிறபேதம் காட்டும் சமூகம்!
மேனியை சிவப்பாக மாற்ற!
க்ரீம்களை பரிந்துரைக்கிறது!
அச்சுறுத்தலுக்கு மத்தியில்!
உண்மை பேசுவது!
தற்கொலைக்குச் சமமானது.!

ரத்ததின் ருசி

ப. மதியழகன்
சிதைக்கப்பட்ட உடலிலிருந்து!
வெளியேறும் துர்நாற்றம்!
கதவின் துவாரத்தின் வழியே!
வெளியே செல்கிறது!
பிரேதத்தை லாவகமின்றி!
கையாண்டதால் தடயத்தை!
அழிக்க முடியவில்லை!
புலனாய்வுத் துறையினரின்!
கவனத்தை திசைதிருப்ப!
கடிதம் எழுதி வைத்தாயிற்று!
தன்னுடைய ரகசியம் தெரிந்தவன்!
ஒருவனுமில்லை என்பதில்!
மனசுக்கு நிம்மதியாயிற்று!
கூலிப்படையை ஏவாமல்!
தானே கொலை செய்ததில்!
மானை வேட்டையாடிய!
மிருகம் போல்!
மனம் ஆசுவாசம் கொண்டது!
அடுத்தடுத்து பண்ண!
வேண்டிய கொலைகளுக்கு!
இது ஒரு பயிற்சியாக!
அமைந்தது!
உள்ளுக்குள் உறங்கிய!
மிருகத்தை உசுப்பிவிட!
அது ரத்தத்தை ருசி!
பார்த்துத் திரிந்தது!
மீண்டும் ஒரு வாய்ப்பு!
கிடைத்தால்!
கொலை செய்வதற்கு!
பட்டியல் தயாராகவே இருந்தது.!

இறுதி சந்திப்பு!

ப. மதியழகன்
உன் கவனத்தை!
ஈர்ப்பதிலேயே குறியாயிருந்தேன்!
என் பார்வைகளை!
நீ ஏனோ புறக்கணித்தாய்!
உன்னிடம் எப்படி!
பேசுவதென்று நான்!
ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!
நீ ஏனோ என்னைப் பற்றிய!
அவதூறு செய்திகளை!
காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னை ஏறெடுத்துப் பார்க்க!
எனக்கு அருகதை இருக்கிறதாயென்று!
என்னை நானே கேட்டுக் கொண்டேன்!
உன்னைப் பற்றி எண்ணங்களாலே!
என்னை நீ விழுங்கிக் கொண்டிருக்கிறாய்!
நண்பர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து!
என் காதலை உன்னிடம் வெளிப்படுத்தாமல்!
இருந்தேன்!
அவகாசம் எடுத்ததால் குடித்தனம் நடத்துவதற்கு!
வேறொருவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டாய்!
அது தான் இறுதி சந்திப்பு!
எனத் தெரிந்திருந்தால்!
அவள் உருவத்தை நெஞ்சத்தில்!
பதியவைத்திருப்பேன்!
எந்தத் திசையில் நான்!
பயணித்தாலும் எதிரே!
நீ தான் வருகிறாய்!
பற்றிக் கொண்ட!
பிடியையும் விட்டு!
அதலபாதாளத்தில்!
விழுந்து கொண்டிருக்கிறேன்!
சம்பவங்கள் எனக்கு!
சாதகமாக இல்லாததால்!
அதிருப்தியில் கொஞ்சம் கொஞ்சமாக!
நான் புதைந்து கொண்டிருக்கிறேன்!
இயலாமையை எண்ணி வருந்தி!
டாஸ்மாக்கே கதியென்று கிடக்கிறேன்.!

நம்பிக்கையில்லா தீர்மானம்

ப. மதியழகன்
நித்தமும் இதனை!
சரியாகச் செய்கிறேன்!
கண்ணாடிப் பார்ப்பதை!
காலணிகளை அணிவதை!
சில்லரைகளைப் பொறுக்குவதை!
ஒருபோதும் மறப்பதில்லை!
கைபேசியை!
எப்போதுமே நான் அந்தப்!
பேருந்தை தவறவிடுவதேயில்லை!
கூட்டத்தினர் அவர்களாகவே!
பஸ்ஸில் ஏற்றி!
நிறுத்தத்தில் இறக்கியும் விடுகிறார்கள்!
பயணச்சீட்டு மட்டுமே!
நான் வாங்குகிறேன்!
சூரியனுக்கு கீழே நடைபெறும்!
குற்றங்களுக்கு அவனைப்!
பொறுப்பாக்க முடியுமா!
படைப்பு கடவுளின்!
பரிசோதனை முயற்சி!
மரணம் கடவுள் நம்மீது!
கொண்டுவரும்!
நம்பிக்கையில்லா தீர்மானம்

உன் காதல் துளிகள்

மதியழகன் சுப்பையா
பகல் முழுவதும்!
தேக்கி வைத்து!
இரவில் ஈரப் படுத்துகிறாய்!
எச்சிலில் ஊறி!
உருவான புழுக்கள்!
பசியால் நௌ¤கிறது!
வீடெங்கும்!
நொடிப் பொழுதுகளில்!
வடிந்து விடுகிறது!
உன் காதல்!
துளிகளாய்!
உன் காதல் சுனை!
வற்றி வரண்டு!
போய்விடும் நாளில்!
துவங்கிடக் கூடும்!
என் காதல்.!

கோடாய் வழியும் காதல்

மதியழகன் சுப்பையா
நேற்றைய!
நகக்கீறல்களோடு!
இன்றையதை ஒப்பிட்டு!
உறுதி செய்து கொண்டாய்!
நாயாய் முகர்ந்து!
நாற்றத்தில்!
மாற்றமில்லையென!
அறிந்து மகிழ்ந்தாய்!
வழக்கமான் இரு!
வார்த்தைகளை!
கூறினாய் கரகரப்புடன்!
உடலை உருவிக்கொண்டு!
சோர்ந்து விழுந்தாய்!
கோடாய் வழிகிறது!
உன் காதல்.!

தெய்வத்தின் தீண்டுதலாய்!

மதியழகன் சுப்பையா
என் ஏவல்களை!
கடமையாகக் கொள்கிறான்!
என் அலங்காரங்களால்!
கலவரப் பட்டிருப்பான்!
என் இயல்பான!
தொடுடல்களை!
தெய்வத்தின் தீண்டுதலாய்!
உணர்வான் போலும்!
சிலிர்த்துக் கொள்வான்!
உள்ளாடையின் கொக்கி!
மாட்டிவிட்டது முதல்!
முகம் பார்த்து பேசுவதில்லை!
இப்பொழுதெல்லாம்!
அக்காவென்று விளிக்காமலே!
பேச முனைகிறான்

கல்லாக இரு, கடவுளே!!

கிரிகாசன்
சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடராம் இறையொளியே!
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே!
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்!
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்!
செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே!
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்!
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்!
பத்தும் பலரும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?!
அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?!
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?!
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?!
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?!
பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்!
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்!
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்!
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்!
வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?!
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?!
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்!
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?!
பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து!
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்!
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து!
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?!
நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்!
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?!
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்!
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?!
நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்!
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று!
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை!
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே!
கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்!
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே!
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை!
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்

இயற்கையும் இவளால் நாணும்!

கிரிகாசன்
மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு!
எனதாசை உளம்மீது வலம் வந்ததே!
கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி!
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே!
வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு!
குளமான தலைதன்னை குறைசொல்லுமே!
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று!
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே!
நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள!
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே!
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்!
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே!
கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய!
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே!
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன!
கனிநூறு பலதென்று மனம்நாணுமே!
பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்!
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே!
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்!
இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே!
வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே!
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே!
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்!
எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே!
குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு!
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே!
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து!
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே!
கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற!
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே!
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்!
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே!
ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்!
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே!
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று!
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே!
தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்!
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே!
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை!
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே !