நகர முடியா இருளறையில்
நாள் பல கடந்து
கண் விழித்தேன்.....
நீலக் கூரை
நாசி துளைக்கும் நாற்றம்
கொத்தாய்க் கொசுக்கள்
ஆடையாய் ஒரு
பொலித்தீன் பை.
சாதிச் சாக்கடையில்
சிக்கிச் சாய்ந்த
காதல் செடியில், பூத்த
சின்னப் பூ நான்
நஞ்சுக் கரங்கள் நசுக்கி எறிந்த
பிஞ்சுப் பூ
புத்தகப்பை ஏந்தும் வயதில்
அவள் கர்ப்பப்பையை நிரப்பிய
சபிக்கப்பட்ட சதை நான்.
இனி...
அனாதை இல்லங்களின்
அழையா விருந்தாளி.
யார் தவறு?
யாருக்கு தண்டனை?
இப்படிக்கு
- குப்பைத்தொட்டிக் குழந்தை -
காருண்யா கதிர்வேற்பிள்ளை