அவர்கள் உங்களை
மிரட்டலாம்
ஏமாளிகள் எப்போதும்
எதிர்த்துப் பேச மாட்டார்கள்
அவர்கள் உங்களைத்
திட்டலாம்
திரும்பத் திட்டுவதற்கு
வார்த்தைகளின்றி தவிப்பீர்கள்
அவர்கள் நிரூபிக்க
முயலலாம்
உங்கள் தரப்பின் மீது
உங்களுக்கே சந்தேகம் தோன்றலாம்
அவர்கள் உங்கள் குடும்பத்தை
ஏசலாம்
முள்கிரீடம் தரித்த ஏசுவைப் போல்
தனக்குள்ளேயே முணுமுணுத்துக்
கொள்வீர்கள்
அவர்கள் மேற்கோள் காட்டலாம்
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை
நீங்கள் அறிய மாட்டீர்கள்
அவர்களுக்கு செல்வாக்கு
இருக்கலாம்
இழந்ததைவிடவும் பத்திரமாக இருப்பதே
மேல் என்று நினைப்பீர்கள்
அவர்கள் பிளாக்மெயில்
செய்யலாம்
இதற்கு மேலும் மோதுவதற்கு
அச்சப்பட்டு வீடு வந்து
சேர்வீர்கள்
ப.மதியழகன்