மனிதா! வேண்டாமே நம்மில் தீண்டாமை
இனிதானிவ் வாழ்வில் தீண்டாமை வேண்டாமே
மண்ணில் மாந்தருக்கு மனதில் தீண்டாமை
எண்ணிடா திடமான கனிவுளம் வேண்டும்
ஆண்டவனை தரிசிக்க ஜாதிபேசும் மனிதா!
மாண்டவுடன் செல்லுமிடம் யாதென்று தெரியாதா
ஆடி அடங்கும் வாழ்க்கையிலே உனக்கு
ஆறடி நிலமும் இல்லையென்பதே கணக்கு
அனலுலையில் தள்ளிவிட்டு செல்லுகின்ற கும்பல்
புனலலையில் கரைப்பதெல்லாம் பழுப்புநிற சாம்பல்
பார்ப்பனென்றும் பரையெனென்றும் பேதம் உலைக்கில்லை
பார்த்திருந்தும் படித்திருந்தும் உன்னறிவில் ஏறவில்லை
நீதிகொன்று பேதம்செய்து இழந்தது இன்னுயிரே
மீதியுனது வாழ்வையேனும் பயனுறவே கழிக்க
வீதியிலே போராடு தீண்டாமை ஒழிக்க- இல்லேல்
நாதியின்றி கிடப்பாய் நடுவீதியிலே நாளை
பாரதியும் பெரியாரும் பகிர்ந்திட்ட பகுத்தறிவு
யாரெதுதான் சொன்னாலும் ஏற்றிடாதோ உன்னறிவு
ஆண்டவனே நினைத்தாலும் ஒழிந்திடாத ஜாதித்
தீண்டாமை ஒழியும் நீ நினைத்தால் இன்று
கிருஷ்ணக்குமார்