வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!
படுக்கை தனில் மல்லாந்து
படுத்து கொண்டு
மரணத்தை சுழலும் காற்றாடியின்
அருகில் வைத்து கொண்டு இருக்கும்
தாத்தாவுக்கு பேரக்குழந்தையின்
பிஞ்சு கரங்களில்
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!
வறுமையின் பிடியில் சுரக்க மறுத்தாலும்
தன் மார்ப்போடு அணைத்து
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கையில்
ஓர் ஏழைத் தாய்க்கு
வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!
கழுத்தை நெரித்திடும்
கடன் தொல்லையில்
வீட்டை விற்று விட்டு
வெளியேறும் பொழுதினில்
தன்னோடு வாலை ஆட்டிக் கொண்டு
தெருவோரம் நிற்கும்
நாய்க்குட்டியைப் பார்க்கையில்
கடனாளி ஒருவனுக்கு
வாழ்வதற்கு இன்னும்
வாழ்க்கை மிச்சம் இருக்கு!
எனக்கும் உனக்கும்
8 நாளில் மடிய போகும்
பட்டாம்பூச்சிக்கும்
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை
இன்னும் மிச்சம் இருக்கு
கவிதமிழ் கன்னியப்பன்