காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும்
கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும்
ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும்
உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும்
நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள்
நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர்
ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில்
அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்!
காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும்
கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும்
மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே
மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான்
சாலையிலே செல்வோர்கள் சட்ட திட்டம்
சரியாக மதித்திடுவர் ஊர்தி யோட்டி
வேலையிலே குறியாக இருப்பார் வேண்டா
விபத்துகளை முறையாகத் தவிர்த்துச் செல்வார்!
வரிசையிலே நிற்கின்ற பாங்கே எங்கும்
வல்லரசு நாட்டினிலோர் நற்ப ழக்கம்
புரியாத மொழி நாட்டார் எதிர் வந்தாலும்
புன்னகைத்துக் கையசைக்கும் நட்புத் தோற்றம்
சரியான விலைகொடுத்து வாங்கும் பண்டம்
சரியில்லை யெனில்பணத்தை வாங்கும் வாய்ப்பு
பெரியளவுக் குப்பையையும் உடன் பொறுக்கிப்
போட்டிடுதல் தொட்டியிலே தூய்மை வேண்டி!
வானுயர்ந்த கட்டடங்கள் சுதந்தி ரத்தீ
வலமேந்தி நிற்குமெழில் அன்னை வெள்ளம்
கானகத்து 'நயாகரா'வாம் நீரின் வீழ்ச்சி
கப்பலின்மேல் வானூர்தி பறக்கும் வேகம்
ஏனென்று கேட்பதற்கோர் ஆளே இன்றி
இளசுகளின் நடையுடைகள் கும் மாளங்கள்
மானினமும் வாத்துகளும் அணில்மு யல்கள்
மட்டில்லா ஏரிகள்முன் போடும் ஆட்டம்!
படிப்பதிலே பெருவிருப்புக் கொண்ட மக்கள்
படிப்பகங்கள் வசதிமிகப் பெரிய தாகும்
துடிப்புடனே விளையாட்டுப் போட்டி எல்லாம்
துணிந்தேகும் இளை ஞர்க்கும் இசையில் ஆர்வம்
நடித்துவரும் திரைப்படங்கள் உலகை வெல்லும்
நாகரிகம் பல நாட்டார் கலப்பில் மின்னும்
அடிப்படையில் நாம்கற்க வேண்டும் பாடம்
அமெரிக்க நாட்டினிலே பலவாய் உண்டு
அரிமா இளங்கண்ணன்