தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஒரு துப்பாக்கியை வடிவமைக்கும்போது

வையவன்
 
குண்டு உட்காரக் குழியில்
அதற்கு சௌகர்யமான வடிவ வசதி
செய்து தந்து விடுகிறீர்கள்
புல்லட்டை வார்த்தெடுக்கும்போது
அதன் கூர்நுனி
திசுக்களின் சாம்ராஜ்யத்தில்
சரேலென்று ஊடுருவி உறுதியாக இறங்க
சிரத்தை காட்டுகிறீர்கள்
மனித உயிரை வளர்ப்பதாகப்
சொல்லிப் பணியாற்றும்போது தான்
பல விஷயங்களை ஏனோ
மறந்து போகிறீர்கள் இயல்பாகவே!
 
 

காதல்

விஸ்வநாத்
கல்லைக் கனியாக்கும் கண்கட்டு வித்தை
மலையை முகிலாக்கும் மாயாஜலம்

சிலருக்கு மனம் இருக்கும் - இடம் மாறும்
சிலருக்கு மனம் இறக்கும் - தடம் மாறும்

காணும் போதெல்லம் காணமாட்டாய்
காணாதபோது கண்டு மகிழ்வாய்

கண்டால் பேச நினைப்பாய்
கண்டதும் ஊமை ஆவாய்

உண்ண பிடிக்காது
உறங்க பிடிக்காது
பித்து பிடித்தவன் போல் பேசித் திரிவாய்

'ஆம்' என்றால்
நீ காதலிக்கிறாய் நண்பா

ரயில் சினேகம்

பார்த்திபன்
உதடுகளில் சிவப்புச் சாயம்;
இன்று பூத்த மல்லிகை மலர்கள் போல் கண்கள்;
சுருண்டு விழும் தங்க நிறக் கூந்தல்;
கால் மேல் கால் போட்டபடி,
நீண்ட கால்கள்;
மேல் காலில்
பாதி கழற்றிய,ஊஞ்சலாடும் ஹை ஹீல்ஸ்.
இரயில் பெட்டியில்
சகபயணியிடம்
உரக்கப் பேசிச்
சிரித்துக் கொண்டே வந்த அவள்,
ஏதோ நிருத்தத்தில்
'டக்', 'டக்' என இறங்கிச் செல்ல,
தொலைந்து போனப் பரிதாபமான ஆடுகள் போல்
எங்கள் கண்களும்
கீழே இறங்கி அவளையே பின்தொடர்கின்றன.

மனித மூளை

கல்முனையான்
மனித மூளை...

மரணித்துப்போன மனிதாபிமானத்தின்
மூத்த பிள்ளைதான் மூளை
இப்போது யாருமற்ற அநாதையாக
காடடுமிராண்டி கலாச்சாரத்திற்கு
முடிசூடா மன்னன்.

வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தால்தான்
சிவப்பு நிறம்...
மூளை சற்று தீவிரமாய் சிந்தித்தாலோ
உலகெங்கும் சிவப்பு நிறம்...

இது உறங்குவது நித்திரையில்தானாம்
வெறும் காய்ச்சி வடித்த பொய்
நித்திரையில் தானே பல பெண்களின்
கற்புகளும் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றது.

சற்று சரியாக இது நடந்ததனால்
ஓரிரு இடங்களில்
பசுமைப் புரட்சி என்ற நாமத்தில்
கொஞ்சம் மனிதாபிமானக் குஞ்சுகளின் மறுபிறப்பு

அமைதியாய் நான்

மீரா ஜோதிலிங்கம்
வெட்கச் சிவப்புகள் ஏதுமில்லை
சின்னச் சிணுங்கல்கள் துளியுமில்லை
கன்னக் குழி அழகுகள் காணவில்லை
கட்டை விரல் கோலங்களும் இல்லாமல்
அமைதியாய் நான்!

தாலிகயிறு இன்னும் ஏறவில்லை
தொப்புள் கொடியும் அறுபடவில்லை
மெட்டி போட்டுவிட ஒருவனில்லை
சடங்கு சம்பிரதாயத்துக்கு வாய்ப்பில்லாமல்
அமைதியாய் நான்!

சாளரத்தை சாத்திவிட்டு
கதவெல்லாம் பூட்டிவைத்து
ஆடைகளை அவிழ்த்து போட்டு
மனசை மட்டும் இரும்பாக்கி
அமைதியாய் நான்!

தொட்டுபார்க்க ஒருவன்
சுவைத்துப் பார்க்க ஒருவன்
நோய்கள் காவிவரும் ஒருவன்
கர்ப்பத் தடைகளோடு அவர்களுடன்
அமைதியாய் நான்!

இன்றைய முகம் நாளை காண்பதற்கில்லை
எனக்கும்தான் முகவரியும்
முகங்களும் நிரந்தரமில்லை! - ஆனாலும்
அமைதியாய் நான்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா

சி.சுப்ரமணிய பாரதியார்
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!


-  

கற்பிழந்த கதை

மன்னார் அமுதன்
விடுமுறையில் கூட
வேலைக்குச் சென்றாய்...

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்

அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்

காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்

கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்

ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்

அதான்,
“நீ கற்பிழந்ததையும் - உன்
கடவுள் கைவிட்டதையும்”

கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது

ஜெயந்த் கிருஷ்ணா
மானே என்றேன்!
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

இதுக்கும் மேல அங்க நின்னா
நமக்கு என்ன மரியாதை?

நட்பு

மலர்
 
மலரின் நட்பை
கொய்ய நினைத்தேன்...
முள்ளில் தைத்து கசிந்தது
நட்பின் ஈரம்...
சிவந்த கண்ணீராய்

குழந்தை கவிதை

அருட்பெருங்கோ
ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.

முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
ஒலியளவு அதிகமாயிருந்ததால்
தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
‘ரிமோட்’ கொண்டுவராததற்கு