வெய்யிலின்
உக்கிர மஞ்சளில்
தோய்ந்து கொண்டிருந்த
ஒரு பகலில்தான்
மாரித்தாத்தா அந்த
மரக்கிளையை நட்டுவைத்தார்.
யார் யாரோ ஊற்றிய தண்ணீரில்
மேல் படர்ந்த முள் பாதுகாப்பில்
ஒரு பெண்பிள்ளையைப் போலத்தான்
வளர்ந்து கொண்டிருந்தது அது.
பெயர் தெரியாத
பறவைகளின் கீதத்தில்
வேறுவேறு அணில்களின்
ஸ்பரிசத்தில்
பசுமையேறிக் கொண்டிருந்தது
அதன் மேல்
ஒரு கவிதையாய்.
வசந்தத்தின் பாடல்கள்
மழை நாளின் புதுமைகள்
பனியின் உறைந்த ரகஸ்யங்கள்
எனப் பருவங்கள்
வீசிய மாயங்களைக்
காற்றில்
எழுதிக்கொண்டிருந்தது அது.
ஊரின்
வாழ்ந்து கெட்ட
கதைகளைக் கேட்டே
வளர்ந்திருந்ததில்
உள்படிந்த சோகத்தின்
மொழிபெயர்ப்பாகவே
அதன் நிழல் கூட
காலடியில் படர்ந்திருந்தது
பூவும் இல்லாது
பிஞ்சும் இல்லாது
காலத்தின் சாபத்தையே
தாங்கி நிற்பதான
அதன் இருப்பு
நியாயமற்றதென
முடிவான தருணத்தில்
மாரித்தாத்தா தானே
ஒரு பழுத்த பழமாகி
அதன் தாழ்ந்த கிளைகளில்
தொங்கிக் கொண்டிருந்ததன் சோகம்
இன்னும் சலசலத்துக் கொண்டிருக்கிறது
அதன் ஈர இலைகளில்
ரமணி