தண்டவாளங்கள் திறக்கின்ற பாதையில்
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதகதி
ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும்
ஒரு குறிப்பிட்ட நிறஒளியும் சோம்பலும்
நிறம் இறுகிய ஒரு மனிதன்
அடிக்கடி தென்படுகிறான்
அவனது உறக்கத்திற்குள்
நிறைய ரயில் வண்டிகள் நுழைந்து செல்லும்போலும்
உடலைப் பிசையும் இளமையைச்
சந்திக்கும் ஒரு பூங்காவாக
எல்லா ரயில்நிலையங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன
கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோதுதான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது
எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்தவெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்
பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை-
குட்டி ரேவதி