தொலைந்துவிடு என்று சொல்லியும்
திருப்பி அழைக்க முற்படுகையில்
திரும்பத் திரும்ப சொல்லவேண்டியதை
பதியச்சொல்கிறாள் பதில் புதியவள் பேசமுடியாத ஒருத்தி.
விதியின் வழியையும் வலியையும்
வாழ்த்துகிறேன் காதலை மட்டுமல்ல
காயங்களையும் - அவள்
விழிகளில் வைத்ததால்.
ஏ...காதலே - நீ என்
காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம்
கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு.
இன்று..
வெண்ணிலா வெள்ளி தீ தூவி - என் தேக
விறகை குளிர்காய எரித்துக் கொண்டது.
நெருப்பில் பிறந்து பறந்த வெள்ளி
தீப்பொறிகளெல்லாம் வானேறி விண்மீன்
வேஷம் போட்டு கொண்டன.
கண்கள் இரண்டும் - சேர்த்து வைத்த தூக்கத்தை
கண்ணீர் துளிகளில் செலவுசெய்து கொண்டன.
மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில்
உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய்
இறைத்து குடித்து கொண்டது - அவளின்
நினைவுக் கோப்பைகள்.
சொல்லாதே என்று சுட்டுவைத்தலும்
துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே
சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம்.
என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.
அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை
தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து
கண்ணங்கள் வழியே வழிகிறது.
அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே
கழுவ முடியும்
சீமான்கனி