புவனமெங்கும் பெய்தமழையில்
நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும்
வென்பணியைப் போன்றவளவள்!
மயிலிறகால் வருடினாலும்
கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல
மென்மையான அன்பைக்
கொண்டவளவள்!
நட்பும் , காதலும் அவளின்
தாய்மைக்கு ஈடுகொடுக்க
இயலாமல் தலைதெறிக்க ஓடும் !
ஏனென்று காரணம் விளங்கவில்லை ,
எனக்கும் உனக்குமான
அன்புக்கால அட்டவணை
என் ஆறுவயதிலேயே
அழிந்துபோனது.
அணைக்கக் கூட அரவணைப்பற்ற
அன்பர்களெல்லாம் எனக்கு
அயலார்களாகவே தோன்றிய
தருணமது!
உன் அன்பை எனக்கு
இறந்துதான் உணர்த்தவேண்டும்
என்று நினைத்தாயா ?
காலதேவனின் கைகளில் சிக்கி
என்னை கவலைக்கடலில்
ஆழ்த்திச் சென்றாயே ?
நீ இருந்து நான் பெற்ற
இன்பங்களை விட,
நீ இறந்து நான் பெற்ற
துன்பங்கள் தான்
நெடுந்தூரமாய்ப் பயணிக்கின்றன.
என்னிரவின் தூக்கங்கள்
அனைத்தும் துக்கத்தின்
விளிம்பிலேயே நின்றுகொண்டு
வரமறுத்தன.
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துத் தூங்கும் எனக்கு
தென்றல் காற்று மூச்சுத்
திணறியது!
தூக்கத்தில் உன் சேலைநுனியைத்
தேடித்திரியும் என் கைகள்
இன்று இருட்டில் தேடித்
துழாவித் துவண்டு போயின!
நிதம் காலை காக்கைக்குச்
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர்.
என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை.
தினம் இரவில்
வானத்தைப் பார்த்தே
கண் அயர்கிறேன்.
நீ நிலவாக வருவாயா?
மேகமாக விரிவாயா ?
விண்மீனாய் திரிவாயா ?
என்ற ஏக்கத்தில்.
அம்மா...
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது.
இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு

க.வனிதா