இருபது,இருபத்தி ஐந்து வருட வாழ்க்கை
இட்டதே கட்டளை.. என
இளவரசியாய் ஆண்டு ....
உண்பதும் , உறங்குவதும்
செல்வாக்காய் செய்து .....
என் மகள் கடலை தாண்டுவாள்
கரையை அளப்பாள் என
ஈன்ற பொழுதுக்கு பெருமை சேர்த்து ....
பார்ப்பவர் பாராட்ட
பட்டங்கள் ,பதவிகள் கொண்டு ...
சிரிப்பு , சிணுங்கல்
என சின்னதொரு அகராதியே
பெற்றோரிடத்து விட்டு வைத்து ...
உற்றாரும் சுற்றமும் வாழ்த்த
ஒரு மகராஜன் கழுத்துக்கு
மாலையாக போகிறோம் - வந்தவள்
வாடினால் என்ன ,வருத்தப்பட்டால் என்ன
எதையும் கண்டுகொள்ளாது ...
சூடி இருப்பதே
கடமையென வாழும் சுந்தர புருஷர்கள்
கண்ணாய் வளர்த்தவர்களை பிரிந்து
கண்ணீர் விடுகையிலும்
வேரோடு பிடுங்கி
நம்மை வேறிடம் நடுகிற பாவனையில் நிற்பதென்ன .....
மனைவியின் கருத்தை கேட்பதே
மரியாதை குறைவாய்
நினைத்து நடக்கும்
நாடறிந்த நல்லவர்கள் ......
ஊரில் உள்ளவரிடத்தெல்லாம்
ஏமாந்த போதும்
ஒருவன் பெற்ற மகளை
உரிமையோடு ஏமாற்ற பிறந்தவர்கள் ....
உலகமெல்லாம் சுற்றி வந்த போதும்
ஒரு நிமிடம் ஓய்வாய் கண்ணயர ...
ஒய்யாரமாய் குதித்தாட
தத்தம் வீடு போல் உண்டா ....என்று
தத்துவம் பேசினாலும்
மாமியார் வீட்டில்
அரை நொடி தாமதம் என்றாலோ
மனைவியை... வாவென்று.....
வாசலில் நின்று
ஏலம்போடுகிற எஜமானர்கள் .....
கட்டியவள் காயச்சலில் கிடந்தாலும்
களைத்து நடந்தாலும் .....
எப்படி இருக்கிறதென கேட்பதற்கு
நானிருக்கிறேன் என்று
நம்பிக்கை கொடுப்பதற்கு
எது தடுக்கிறதோ தெரியவில்லை ..... இவர்களை !!
ஏன் என்று கேட்டாலோ
எதுவும் எனக்கு தெரியாது
இதெல்லாம் பழக்கமில்லை என
வளர்ந்த சூழ்நிலையும் ,
வருகிற காலத்தையும் காரணம் காட்டி
தப்பித்து கொள்ளும்
இந்த மன்னாதி மன்னர்கள் உடன்
தேசத்தை இழந்து ,
தெருவோடு ...
வனவாசம் வந்தவர்களாய் நாம்

சுபத்ரா