வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும்
கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில்
ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க
காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார்
ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன்
வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா?
துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின்
துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா?
ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும்
அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா?
ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி
காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா?
மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே
தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா?
வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர பூமியிலே
துன்பநிலை மாற்றி அன்புப் பூப்பூக்க வைப்பாரா?
கண்டதே காட்சி என்ற கசப்பான நிலை மாற்றி
கொண்டதே உயர்வு என்ற குடும்ப நிலை அமைப்பாரா?
உதயத்து விடிவெள்ளி உலகுக்கு ஒளியூட்ட
எம் இதயத்தைப் புதுப்பிக்க எம்மில் பிறப்பாரா?
காவலூர் கண்மணி