அமரர்.அருள் மா.இராஜேந்திரன் - கவிதாஞ்சலி - மன்னார் அமுதன்

Photo by engin akyurt on Unsplash

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா  சிறப்புகள் எல்லாம் மெய்யே

ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை

அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை

வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு   மினிது இயம்பிய தென்பார்

அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்

வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்

தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா  சிறப்புகள் எல்லாம் மெய்யே


-  
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.