நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!
நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!
உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!
பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!
பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!
தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!
ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!
நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!
நிலவை.பார்த்திபன்