தாளம் தப்பாமல்
அடி சறுக்காமல்
உச்சி முதல் உள்ளங்
கால் வரை ஆட்டம்
காண -
களைகட்டியது
கழைக் கூத்து!
டோலக்கு அடிக்கும்
மனிதனுக்கு !
புல்லாக்குப்போட்ட
அவனின் மனைவிக்கு!
அலுமினியத் தட்டில்
பிச்சை திரட்டும்
சிறுவனுக்கு!
வளையத்திற்குள்
உடல் ஒடுக்கி,
உயரே கட்டிய
கயிற்றில் கால்
பொருத்தி,
ஆகாசத்தையும்
பூமியையும்
தன் நெற்றிப் பொட்டில்
வசப்படுத்தி,
பின்னுக்கும்
முன்னுக்குமாய்
லாவகம் செய்யும்
உழைப்பாளி அவளின்
ஒவ்வொரு நாளைய
வலி
ஒருபோதும்
புரிதலில்லை!
அந்தச் சிறுமியின்
சார்பில்
நமக்கோ - ஒப்புக்கு
உச்சுக்
கொட்டலும் ஒரு ரூபாய்
பிச்சையிடுதலும் தவிர
பேருதவி வேறொன்றில்லை