காலை தேவதையும் கன்னுக்குட்டியும் - சீமான் கனி

Photo by Simon Berger on Unsplash

கனவுகளுக்கு,
திசுக்களை  தின்ன கொடுத்துவிட்டு
தீராத மீதியோடு திரும்பிவிடுகிறது
தினசரி தேவைக்கு மூளை.

திறவா கண்ணை தீண்டி திறந்துவிடுகிறது
காலை கதிரவளின்  கைவிரல்.

திரவ நெருப்போடு தெரிந்த தேவதை ஒருத்தி
தித்திக்கும் தீ   உண்னச்சொல்லி;
தெவிட்டாத தேன் இதழ் கொண்டு
கன்னத்தில் காலைவணக்கமும்
கமுக்கமாய் சொல்லி கடந்து போனாள்.

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி பாக்கி கடனையும்
பக்குவமாய் முடித்து விட்டு;
நீர் குளிக்கச்சொல்லி தீதூவ திறக்கிறாள்
ஒரு குட்டி குழாய் மேகம்.

விஷம் துப்பி நான்கைந்து
நரைகளையும் சேர்த்து  நுரைகக்க வைத்து
சாந்தமாகிறாள் ஷாம்ப்பு என்ற சர்பம்.

நாற்றம் போக்க நறுமணம் பூசிக்கொண்டு உடலில்
நனைந்து நாட்டியமாடிவிட்டு நமத்து போகிறாள்
நாகரீக சோப்புக்கட்டி.

சிக்கனமாய் செலவுசெய்த
செயற்கை மழை குளியில் மேனியில் ஆங்காங்கே
சிதறி கிடந்தன சில்லறை துளிகள்.

சில்லறை சிதறல்களை; கண்ட கள்வனாய்;
கவர்ந்து கொண்டாள் காதிபவன் கதர்த்துண்டு .
கட்டிகொண்டேன்.

தேவதை சேலை தலைப்பின் வாசம் பிடிக்கவும்
சேலை மறைக்காத சில சிறப்பு பகுதியில்
சில்மிஷம் படிக்கவும் சீண்டாமல் விட்டு வைத்தேன்
சிகை முடிகளை.

தெரியும் என்றே தேவதை வந்து
செல்லமாய் திட்டி சேலை துவட்ட-செய்த
சில்மிஷ சடங்கில் கொஞ்சம்
சிரித்து சிலிர்த்து கொண்டாள்.

சிற்றாடை கட்டி சிங்காரமாய் ஒரு குட்டி;
செல்ல கன்னுக்குட்டியாய்   ஓடிவந்து கட்டிக்கொண்டு
கலவரமாய் கேட்டாள்.
''ஆறடி அப்பாவுக்கு அரையடி கூந்தல்
ஆற்றிவிட ஒரு ஆள் வேண்டுமோ!?! என்று
சீமான் கனி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.