அப்படித்தான் ஒரு நாள்
எங்கள் வீட்டு புளியமரத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த்த
புள்ளிபோட்ட குயிலை
பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.
புதுச்சேரியின் நீலக்கடல் விளிம்பு என்ன?
தாமிரபரணிக்கரையின்
கல்லிடைக்குறிச்சி என்ன?
லண்டன்
தேம்ஸ் ஆற்றங்கரையிலும்
"தேமா புளிமா" என்று
அது "யாப்பிக்கொண்டு தான்"
இருக்கும்!
பாடும் பறவைகள் என்றால்
அலைகுரல்கள் என
(வாண்டரிங் வாய்செஸ்)
அந்த ஒலிப்பிழம்பில்
"ஒளித்து விளையாடியவர்கள்"
எத்தனை பேர்?
வார்ட்ஸ் வர்த்..ஷெல்லி..கீட்ஸ்
நம் மாணிக்கக்கவிஞன்
மகா பாரதி..
வங்கத்துக் கங்கையில்
கை நிறைய தங்கக்கவிதைகளை
கரைத்து விட்ட
ஓங்கி உலகளந்த கவிஞன்
தாகூர்...
இன்னும்
காகிதத்தையும் கற்பனையயும்
வலை செய்து
அதைப்பிடிக்க
புறப்பட்டவர்களில்
நானும் ஒருவன்.
காதல் எனும் கடல்கள்
அதன் கடுகுத்தொண்டையில்
கரு தரித்துப்பொங்கிய
உரு தேடி நானும்
உருகி உருகியே
உற்றுப்பார்த்தேன்
நானும் அந்த
புள்ளிக்குயிலுக்குள்
புதைந்து கொள்ள ஆசை தான்.
புளியங்கிளையின்
புல்லிய
இலைகளின் இமைகள் விரித்து
இடுக்கி இடுக்கி
உயரே பார்த்தபோது..
"ப்ளக்"..
அந்த ஞானப்பறவையும்
பறவை தானே.
மின்னல்களை
அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
"மிச்சத்தை"
நான் எடுத்துக்கொண்டு
முகத்தைத் துடைத்துக்கொண்டேன்.
ருத்ரா