தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நேற்றின் எச்சில்

கல்யாண்ஜி
தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே வரிகள் இருந்தன
நீங்கள் அமிழ்கிற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை
உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.
உங்களுக்குப் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று- கல்யாண்ஜி (காலச்சுவடு)

நீ வேண்டும்

எட்வின் பிரிட்டோ
அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு

கரையோரக் கனவுகள்

உமா
என்ன அது?
அன்றாடம் நான் கடக்கும் வீதி
அன்று மட்டும் பூக்கள் நிறைந்ததாய்!
என்றோ நான் பார்த்த சிலர்
எனக்காய் அங்கே!
எதற்கோ ஓடுகின்றனர்!
ஏன் என்று தெரியாமல்
நானும் ஓடுகிறேன்.
அவர்கள் பின்னால்
ஆம்! பின்னால்!

ஓட வலு இருந்தும்
ஈடு கட்ட முடியாமல்
இளைப்பாறுகிறேன்
மர நிழலில்.

என்ன அது?
மர கிளை உடைந்து
அதனுடன் நான்
அலை கடலில்!
நீச்சல் தெரியாமலே
நீந்தி கரை சேர்கிறேன்.

எங்கோ மணியின் சத்தம் .
அதோ...
என்னை நோக்கி
ஒரு கூட்டம்.
அவர்கள் நெருங்கி வர வர
மணியின் சத்தமும்
உரக்க கேட்கிறது.
ஆயுதம் போல அவர்கள் கையில்!
ஓலமிட்ட படியே
மிக நெருக்கத்தில் அவர்கள்
உதவிக்கு ஆட்கள் இன்றி
மிகுந்த பயத்தில் நான்!
என்ன அது என அறியாமல்
பதற்றத்தில் கண்விழிக்க
நிகழ்ந்தது கனவு என கூறி
விலகி போனாள் கனவு தேவதை.

இப்போதும்
மணி மட்டும் உரக்க அடித்து
கொண்டே இருக்கிறது
என் வீட்டு கடிகாரத்தில்

பெய்யென பெய்க

ரமேஷ் சிவஞானம்
பிள்ளைப்பூமிக்காய்
வானத்தாயின்
பாலமிர்தம்
இது
இளந்தைத் தூறல்
இன்பத்தின் சாரல்
உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்

ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி
விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
சிரிக்கும் உழவர் கொண்டு
வாழ் உலகம் இன்பம்
வலை விரிக்க
உன் வரவு வேண்டும்
விதை நிலம்
கருத்தரிதுக்கொள்ள

இங்கு நிலவும்
உன் வரவு
பொங்கும் இன்பத்தின்
உறவு
கனவும் இனி
உன் உலகு

நனையும் உடல்
தேன் வார்த்த திடல்

வருவாய் தினம்
கண்குளிரும்
என் மனம்

நமது உரிமைக்கான பட்டாணைகள்

சு.மு.அகமது
உங்கள் தூரிகைகளுக்கான மசி
இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது

கடலளவு எண்ணங்களில்
கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை

யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது
நம் செயல்களை நிர்ணயிக்கும்

கொடுஞ்செயல்களின் ஆகிருதி
தரவுகளில் புனைவாய் பதியப்பட்டு

எழுச்சியின் பேருரை எங்கும் வியாபிக்க
விதர்த்துப் போகும் நிலைக்களன்கள்
நீங்கா நினைவுகளூடே
புதுப்பதியனாய் துளிர்த்தெழ
இன்னும் நிரம்பாமலேயே வழிந்தோடுகிறது
எதிர்பார்ப்புக்களின் அலையோசை
கானல் நீர்ப்பரப்பின் மீது தத்தளிக்கிறது
நமது உரிமைக்கான பட்டாணைகள்

சலனம்

சகாரா
தெரியாத ஊரில்
தெரிந்தவர் முகத்தை

தேர்தலில் தேர்வுகளில்
எப்படியேனும் வெற்றியை

சலூனில் சுவர்களில்
கிறங்கடிக்கும் ஆபாசத்தை

லாட்டரி முடிவுகளில்
நமது சீட்டின் நம்பரை

பயண நெரிசலிலும்
பக்கத்தில் கிளுகிளுப்பை

சிரிப்போ சீரியஸோ
சினிமாவின் இடையில் ஒரு சீனை

அலுவலகப் பெண்டிரின்
ஆடை விலகலை

அடுத்தவன் பாக்கெட்டில்
நம் கைச்செலவுக்கான பணத்தை

பிரசவ அறையில்
பிறப்பினில் ஆண்மையை

பேருந்து நிறுத்தத்தில்
பெண்மையின் பூரிப்பை

எதேச்சையாய்த் தேடும்
எடுபட்டபய மனசு

- சகாரா ("நதிக்கரையில் தொலைந்த மணல்”)

அழகு தீது

சண்முகம்
நீ அழகாய் இருப்பது
உனக்கு பெருமையாய் இருக்கலாம்.
ஆனால்  உன் பின்னாலே சுற்றி
வீணாய் போன  எனக்குத்தான் தெரியும்
அது எவ்வளவு தீதென்று

பிரியா வரம்

தேவிஅன்பு
நீ என்னை விட்டு பிரிந்து சென்ற
போது எனக்கு கோபம் வந்தது
என்னை விடவும் உன் வேலை தான்
உனக்கு பெரியதோ என்று தோன்றியது

எனக்காகத் தான் அந்த வேலைக்குச்
செல்கின்றாய் என்பது கூட புரியாதவளாய்
பிறகு தனிமையில் நான் உன் நினைவில்
அழுதபோது எனக்கும் புரிந்தது

என்னை போல் நீயும் நான் வேதனைபட கூடாது
என்பதற்காக மனதினுள் என்னை நினைத்து
அழுது இருப்பாயோ?

நான் உன்னை நினைத்து ஏங்குவது போல நீயும்
என்னை நினைத்து ஏங்க்கிக்கொண்டு இருப்பயோ?

உன் ஸ்பரிசத்திற்காக நான் ஏங்குவது போல
அங்கு நீயும் ஏங்கிக்கொண்டு இருப்பாயோ?


காலையில் எழுந்தவுடன் உன் முகம்
காணாமல் நான் தவிப்பதை போல்
அங்கு நீயும் என் முகம் காணாமல்
தவித்து கொண்டு இருப்பாயோ?


கடல் கடந்து சென்ற என் அன்பு கணவணே!
இனி என்றும் பிரியா வரத்தை நமக்கு
அருள வேண்டி கடவுளிடம் கோரிக்கை வைப்போம்

நீ வருவாயென

பாரதிபிரியா
ஓராயிரம் உறவுகள் என்னை
சூழ்ந்தாலும் உன் அன்புக்கு முன்னே
எல்லாமே தூரம்தான். நானும்
சிறைக்கைதிதான் உனக்குள்ளே!

போலியான புன்னகைகள்,
கேலியான பார்வைகள்,
எல்லாமே பழகிப்போனது.
உன் அறிமுகம் கிடைக்கும்வரை!

புண்பட்டு நொறுங்கிய
பெண்மனதை புன்னகையால்
உயிர்ப்பித்து, அன்பால்
உருகொடுத்தாய்!

உன் பார்வைகளும் வார்த்தைகளும்
நான் என்பதை மறக்க செய்தது.
உனக்கும் எனக்கும் ஒரு நெருக்கம்.
காரணம் அறியாமல் தவிக்கிறேன்!

உன் தொடர்பு எல்லைக்குள்
நான் உலகையே வலம்வந்தேன்.
வெறும் வார்த்தையல்ல நீ! என்
வாழ்க்கை உன் வார்த்தைகள்!

நான் காணும் உலகாக,
நான் தேடும் நிழலாக,
நான் போகும் வழியாக,
நீ எப்போதும் என்னுடன்!

நொடிப்பொழுது பிரிவுகளில்
நிலைகுலைந்து போகிறேன்.
உயிரைப்பிடித்துக்கொண்டு,
இன்னும் உனக்காக மட்டுமே!

நீ வரும்வழி நோக்கி தவமிருக்கிறேன்
பசி தாகம் மறந்து, உன்
பாதப்படிவுகளில் முகம் வைத்து
காத்திருக்கிறேன், நீ வருவாயென

கேட்டதும் கிடைத்ததும்

வையவன்
நீ கவிதையைக் கேட்டாய்
நான் காதலைக் கேட்டேன்
நீ உள்ளத்தைக் கேட்டாய்
நான் உதடுகளைக் கேட்டேன்
நீ பகல்களைக் கேட்டாய்
நான் இரவுகளைக் கேட்டேன்
நீ உணர்வுகளைக் கேட்டாய்
நான் உறுப்புகளைக் கேட்டேன்
நீ வாழ்க்கையைக் கேட்டாய்
நான் படுக்கையைக் கேட்டேன்
உதவாக்கரை என்றாய்
உதவிக் கொண்டோம் ஒருவருக்கொருவர்
பகிர்ந்து கொண்டோம் பாதிப் பாதி
மீதியிருப்பது நீயும் நானும்
கேட்க மறந்து பேதமிழந்து