தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பூக்களும் காயம் செய்யும்

வைரமுத்து
 
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.
 

இலை

வைரமுத்து
நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்

உன் கூந்தல்

ஆனந்தன்
முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன்
கூந்தலோ!

அதன் கருமை கண்ட
அந்த அண்டங் காக்கைக்கும்
ஆனந்தம்!

தனக்கொன்று இல்லை என்று
தனக்குள் வருந்திய நிலவின்
தாக்கம் எனக்கு மட்டும்
தெரியும்!

கார்கால மேகமென கண்ட
கானகத்து மயிலும்
கொண்டை உயர்த்தி
தோகை விரிக்கக்
கண்டேன்!

தமிழ் கரைக் கண்ட
நக்கீரனுக்கு - நீ
முன்னோளாகி இருந்தால்
கூந்தலில் மணம்
உண்டோ என்ற வாதம்
வந்திருக்குமோ ?

உன்னை படைத்த
உன்னத பிரம்மனுக்கு,
உன் முகம் என்னும்
உல்லாச நிலவுக்கும்
உலகமெனும் உருண்டைக்கும்
கூந்தலெனும் உறவு வைக்க
ஆசை!

சன்னலோரத் தென்றலில்
சின்னதாய் அசையும்
உன் கூந்தல் கண்டு
மெல்லிய கொடியிலாடும்
மலர்ந்த மல்லிகைக்கும்
உன் கூந்தலேறி
ஊஞ்சல் ஆட
ஆசை

நீ வேண்டும்

எட்வின் பிரிட்டோ
அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு

ஆகாச வாணி

சுபத்ரா
எந்த ஊருக்கு ?
எங்கே வீடு தேடுகிறீர்கள் ?
எப்பொழுது பால் காய்ச்சுவீர்கள்?
குழந்தையை பற்றி..
எப்போது பெற திட்டம் ?
என்ன பெயர் வைப்பாய்?
எதிர்காலம் ,நிகழ்காலம் சார்ந்த
ஏன் ?
எதற்கு?
எப்படி?
எப்போது?

இதனால் சகலமானவர்களுக்கும்
சொல்லி கொள்வது என்னவென்றால்
உங்கள் கேள்விகளே தான் எனக்கும்
பதில் மட்டுமே என்னிடமில்லை

அடுப்பை தாண்டி
படிப்பெய்தி நின்ற போதும்
காற்று வர சன்னலை திறந்த கருணை
கைதிக்கு கை விலங்கு கழற்ற உதவவில்லை

எதுவாயினும்
என் பங்களிப்பு பெரும் பாதிதான்
ஆனாலும்
ஆலோசனை கூட்டமில்லாத அரசாங்கத்தில்
அறிவிப்புக்கு காத்திருக்கும்
பெண் ஜாதி நான்...

அன்றாட முடிவுகள் அத்தனையும்
என் வீட்டு
ஆகாச வாணியில் செய்திகளாய்...
அடுத்தவர் அறியுமுன்
அதிகாரபூர்வமாய் தெரிந்து சொல்ல...

எப்போதாவது ...
நேயர் விருப்பமென
நிரம்பி நிற்கும்
என் வேண்டுகோள்கள் படிக்கப்படும்
அழுகிற குழந்தைக்கான
அவசர சமாதானமாய்
உள்ளந் தேற்றி கொள்ள
உள் நினைவை ஏமாற்றி கொள்ள
உலகறிந்த பெரும்பான்மை பொய்களில் ஒன்று
பெருந்தன்மையோடு பரிசளிக்கப்படும்

நிரந்தர நிழல்கள்

எட்வின் பிரிட்டோ
இருவாரங்களுக்கு முன்
நாம் முகம் பார்த்த நிலவு
இன்று உருத்தெரியாமல்...,
அமாவாசையாம்.

இன்று செடியின்கீழ் சருகாய்,
நேற்று நீ அரை மணி நேரம்
கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி.

சாஹித்திய நேரங்களில் நொடியில் மனதுள்
ஜனித்து மரித்துப் போகும் கவிதைகள்

கை குலுக்கும்போதே விடைப்பெற்றுப்
போகும் புது அறிமுகங்கள்

தேவைகளின் போதுமட்டும்
தேடிவந்துப் போகும் நண்பர்கள்

இப்படி நிரந்தரமில்லா நிழல்களிடையில்
நிரந்தரமாய் நீயும்,
உன் நினைவுகளும் மட்டும்

கோடையின் இறுதி நாட்கள்

பார்த்திபன்
கோடையின் இறுதி நாட்கள்,
ஒவ்வொன்றாய் அணையும் விளக்குகளைப் போல்
பிரகாசித்து மங்குகின்றன.
ஒரு விளக்கை விட்டு
இன்னொரு விளக்கிற்குப் பறக்கும்
ஈசலாய் நான்

சார்பியல்

பார்த்திபன்
வாழ்க்கையின் சாப்பாட்டு அறை
மேஜையில் அமர்ந்திருக்கிறோம்.
என் தட்டில்
ஒன்றுமேயில்லை.

என் மகளின் தட்டில்
நேரம்
என்ற மிகப் பெரிய ரொட்டித் துண்டு
இருக்கிறது.
அதை
'கறக் முறக் கறக் முறக்'
என சத்தமாக வாயில் நொறுக்கி,
அவள்
நிதானமாக
கடித்து,
கடித்து,
ரசித்துத்
தின்கிறாள்.
அவளுடைய வாயோரம்
ஒட்டியிருக்கும்
சிறு சிறு
துகள்களை மட்டும்
பொறுக்கியெடுத்து
என் வாயில் போட்டுக் கொள்கிறேன்.
துகள்கள் போதவில்லை, இன்னும் பசிக்கிறது.
மனமோ, அவள் சாப்பிடுவதைப் பார்த்தே
நிறைந்திருக்கிறது,
இதுவே போதுமெனத் தோன்றுகிறது.
 

சில முற்றுப் புள்ளிகள்

சேவியர்
முடிவுகள் இல்லாத
முடிவு தேடும்
பயணத்தில் நான்.

சாலைகளின் மீதான
பயணமும்,
சேலைகளின் மீதான
சலனமும்,

பக்கங்களைத் தாண்டி ஓடும்
வாக்கியங்களும்,
வாழ்க்கையில் தங்கி விடும்
பாக்கியங்களும்,

எல்லாம்
ஏதோ ஓர்
முற்றுப் புள்ளி முனையில்
அறையப்பட்டு
இறந்து போகின்றன.

சிரிப்புகளின் நுனிகளோ,
இல்லையேல்
கசப்பின் கனிகளோ,
எதுவுமே
எல்லைகளற்ற எல்லையை
கொள்கையாய் கொண்டதில்லை.

இன்னும் சிலநாள்
இருக்காதா எனும்
ஆசைக் கனவுகளை
வெளிச்சம் வந்து இழுத்துச்
செல்வது இயற்கை தானே !

முடிவு
முடிவு தான்.
தூண்டிலில் சிக்கிய மீன்
மீண்டும் ஒருமுறை
நீந்த முடிவதில்லை.

முடிவு
ஆரம்பம் தான்...
தூண்டில் மீனின் மரணம்
ஆகார தேவையின்
ஆதாரமாய் விடிவதுண்டு.

முற்றுப் புள்ளிகள்
முற்றுப் பெறுவதில்லை என்பதும்
முற்றுப் பெறாதவற்றிற்கு
முற்றுப் புள்ளிகளே
இல்லை என்பதும்
இலக்கணங்களில் இல்லை.

ஆனாலும்
சில
இடம் மாறிய புள்ளிகள்
கோலத்தின் தூண்கள் போல
வரவேற்புக் கம்பளம்
விரிப்பதுமுண்டு.

நானும் ஆசைப்படுகிறேன்,
முற்றுப் புள்ளியை
மையப்புள்ளியாக்கிய
ஓர்
வட்டமாய் வாழ

அம்மா

சேவியர்
அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.