பிறப்பும் இறப்பும் விதியின் விடை கேட்டு
எந்தை காலத்து விந்தை விளையாட்டு
இவன் பிறப்பும் இறப்பும் அவ்வரக்கர் கையில்
மனிதப் பிழையாய் நானோ இக்கரையில்
எட்டுத் திக்கும் உன் ஓலம் கேட்டேன்
என் செவிகளை மூடிக்கொண்டேன்
உன் குருதி தேங்கும் ஆழி கண்டே
என் விழிகளுக்கு விலங்கிட்டேன்
உரிமை என்றாய்; வாழ்வு என்றாய்;
என் உதடுகள் ஊமையாயின
செவியும் விழியும் உதடும் அடைத்தேன்
காந்திய தேசத்து காவலன் நான்
முறுக்கு மீசை பாரதியே
எங்கோர் தேசத்தில் அழுதவன் கண்டழுதாய்
கண்முன் ஆயிரம் கொலைகள்
கண்டும் காணாமல் கட்டையாய் நான்
வலியும் இரணமும் எமக்கே எமக்கா
பைந்தமிழ் பேசும் இனத்தின் உறவா
செம்மொழியாம் தமிழ் கண்ட வேந்தர்கள்
மொழியின் ஒலியோடு வலியும் கண்டனரோ
சேவும் லெனினும் உன்னோடிருக்க
அவர்தந்த தேசமோ உனையே எதிர்க்க
அன்பின் உருவாய் புத்தன் இருக்க
அவன் முன்னே மயானம் கண்டாய்
இன்று மனிதம் பேசும் மானுடம்
வசதியாய் உன்னை மட்டும் மறந்ததேன்
வெள்ளுடை தரித்த சொல்லுடை வேந்தர்கள்
தனக்கென பலனென உனை மறந்ததேன்
அங்கே உடைந்த கருப்பைகளும்
தழலில் கருகிய மொட்டுக்களும்
மிருகங்கள் குதறிய மனிதர்களும்
உதிரம் சிந்திய வீரர்களும்
விதியின் கணக்கில் பாவமென்றால்
அதில் பெரும்பங்கு எனக்குமுண்டு
பாவத்தின் சம்பளம் மரணமாம்
பாவம் மட்டுமே செய்த எனக்கு?
முள்வேலிக் கம்பிகள் மனித எல்லைகள்
எனில் அன்பும் அறமும் உறங்குவதெங்கே
கொடிது கொடிது மானிடப் பிறவி
அதிலும் கொடிதிந்த தமிழ்ப்பிறவி

தாவேதா