தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உன் நினைவுகள்

ஜெயந்த் கிருஷ்ணா
தோற்றாலென்ன
வெற்றிப் புன்னகையோடு உன்
நினைவுகள்

ஆண்டின் இறுதி

பிரபா
ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்து
காலண்டர் கேட்டது

என்னைத் தவிர வேறென்னத்தை
கிழித்தாய்?

விதி

முத்து கருப்புசாமி
ஆயுள் ரேகை இருந்தும்
இறந்து கிடக்கிறது...
பழுத்த இலை

வட்டம்

அபிமன்யு ராஜராஜன்
இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!

எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!

விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!

காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!

மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!

ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்

நீருற்ற வா

சங்கர்.ப
நிறைய
தேங்குகின்றன
உன் நினைவுகள்
என்
நினைவலைகளில்

நிறைய
ஒப்பந்தம்
செய்து கொண்டாய்
என்னை
பாராமலிருக்க
உன் மனத்துடன்

அம்புகளை
எய்துவிட்டு
அமைதியாகிவிடுகிறது
உன் விழிகள்
ஆனந்தமடைகிறது
என் மனது

தூக்கத்தில்
நடப்பவனை
கேள்விப்பட்டிருப்பாய்
அனால்- நான்
உன் நடையால்
தூக்கம் கெட்டு
அலைகிறேன்

கடல் அலை
பார்த்து
பயந்ததில்லை
நான் - ஆனால்
உன் கடைக்கண்ணின்
அலை அடித்து
அதிர்ந்து
போயிருக்கிறேன்

காற்று பட்டு
சிவந்து
போன உன்
கன்னங்களை
பார்த்து
நான் நிறையவே
காயம்பட்டிருக்கிறேன்

உன்
ஒற்றைச்
சுருள் முடியில்
என்னை எப்போதோ
முடிந்து விட்டாய்
தன்னை
அறியாமல்

என்
திருட்டுப்பார்வை
வேகத்தை
ஜீரணிக்க முடியாமல்
என்
காதல் மரத்தின்
சில
கிளைகளை
வெட்டிச் சென்றாய்

நம்
காதல்
மரத்தின்
வேரில் - நீ
நீரூற்றும்
நாள்
வெகு தொலைவில்
இல்லை

வருக வருக கி.பி.2013

ரிஷ்வன்
 
மாயன் பாடிய
முகாரிக்கு
முடிவுறை எழுதி
பூபாளம் பாடி
புத்தொளி வீச வரும்
புத்தாண்டே வருக...!
இருண்ட தமிழகம் ஓளி பெற
வறண்ட மேகங்கள்  
கருமேகமாய் மாறி
திரண்டு வந்து மாரியாக - கரை
புரண்டு ஓட...
புத்தாண்டே வருக...!
‘சந்தர்ப்பம்’ என்ற
புத்தம் புதிய புத்தகத்தின்
முதல் அத்தியாயமாக
புது வருட முதல் நாள்....!
நாம் எழுதப் போகும்
வார்த்தைகளுக்காக
எழுத்துகள் இன்றி
எதிரில் விரிக்கப்பட்டிருக்கிறது...!
புதுமையைப் படைப்போம்
புரட்சியை வித்திடுவோம்
இத்தரை வீதியில்
முத்திரை இடுவோம்...!
வருக வருக கி.பி.2013....!
தருக தருக சுபிட்சத்தை

சர்க்கரைக் கண்ணீர்

முத்து கருப்புசாமி
சர்க்கரைன்னு பேப்பர்ல எழுதினால் இனிக்காது
என்று ஏதேதோ சொல்லி திட்டிக்கொண்டிருந்த அப்பாவை
அந்த நான்கு வயது குழந்தை (தம்பி)
பார்த்துக்கொண்டே இருந்தது .
மாதங்கள் பல கடந்தன.
அன்று தன் தம்பி எதையோ எழுதிப்பார்த்துவிட்டு
பேப்பரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அக்கா அதை எட்டிப்பார்த்தாள்.
அதில் சர்க்கரை என்று எழுதியிருந்தது.
அவளுக்கு புரிந்தது தம்பி முதன் முதலில்
எழுப்பார்த்தது அவனுக்கு வாய் இனிக்காவிட்டாலும்
மனசு இனிக்கும் என்று.
தூரத்தில் பார்த்த அப்பாவின்
கண்களில் கண்ணீர்

வாழையடி வாழை

மு மேத்தா
 எப்போதும் நான் என் இலைச் சிறகுகளை விரித்தே வைத்திருப்பதால்
பறக்கத் தயாராயிருக்கும் மிக் விமானம் போல பார்வைக்குத்
தெரிகிறேன்.

இதனால் இந்த மண்ணில் பெருகிவரும்
மாபெரிய கொடுமைகளை
கோடையிடித் தாக்குதலை
கூக்குரலில் ஆர்ப்பரிப்பை
கொலைகளது கணக்கெடுப்பைக்
கண்ட மனமொடிந்து
மனமிடிந்து என்றேனும்

என்றேனும் ஒரு நாள்
இந்த புமியிலிருந்து
பறந்து போய்விடுவேன்
என்று
எவரேனும் எதிர்பார்த்தால்
அவர்கள் எமாந்து போவர்கள்!

நான்
மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்

நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்து விட்டால் என்
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்!

நான்
வெட்ட வெட்டத்
துளிர்ப்பேன் தழைப்பேன்
இறப்பின் மடியினில்
கண்கள் விழிப்பேன்

என்
ஒவ்வொரு இறப்பும்
ஒவ்வொரு பிறப்பு!

ஒவ்வொரு பிறப்பும்
தனித் தனிச் சிறப்பு!

மானுட சந்ததி
மறையாத சந்ததி

நானும் அந்த
ஐpவ சங்கிலி
அறுந்து விடாமல்

தொடர்ந்து வருகிற
தவிப்பின் துடிப்பு!

புமியின் புல்லரிப்பு
புதுமைகிளன் இனைப்பு
புதுயுகத்தின் கனைப்பு!

நான் தனி வாழை அல்ல
வாழையடி வாழை! 

முரண்களால் நிறைந்த வாழ்க்கை

அமுதாராம்
புகை நமக்குப் பகை
புண்பட புண்பட
புகைத்துக்கொண்டிருக்கிறோம்
குடி குடியைக் கெடுக்கும்
மொடாக்குடியன்களாக
மாறிக்கொண்டிருக்கிறோம்
 
பெண்கள் நாட்டின் கண்கள்
பச்சைக்குழந்தையென்றும் பாராமல்
பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறோம்
 
இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
எல்லா வேலைகளுக்கும் இலஞ்சத்தை
வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றோம்
 
தூய்மை இந்தியா
சாதி மதம் இன பேதம் பாராட்டி
முதலாளித்துவ ஊழல் அரசியலால்
அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
முரண்கள் அழகுதான்
இவை?
 

நூறாவது முறையாய்

மனுநீதி
நான் விழித்ததும்
நீ காபிகொண்டு
வரும்போது உன்னை
இருக்க கட்டி கொண்டு
அந்த சப்தமில்லாத
முத்தம் உன் சிணுங்கல் !!
தலை துவட்ட
நான்
துண்டு கேட்கும் போது
மறுபடியும்
நாம் குளித்த நாட்கள் !!
பணிக்கு செல்ல
மனமில்லாமல்
நிற்கும் எனக்கு
நீ முத்தம்
தந்து வழி
அனுப்பும்
அந்த நேரம் !!
மனம் வீட்டிலும்
உடல் பணியிலும்
மாலைக்காக
நான் ஏங்கும்
அந்த பணியிட நாட்கள் !!
இத்தனை அழகா
என நான் தினமும்
வியக்க என்னை
வரவேற்கும்
உன் புன்சிரிப்பு !!
உன் முகம் என்ன
மாயகண்ணாடியா
பார்த்தவுடன் என்
கவலைகள்
மறைந்து போகின்றன !!
நம் ஊடலுக்கு
சான்றாக நம்
குட்டி தேவதை
ஆம்...
உன்னை விட அழகாய்!!
நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
விட்டு கொடுத்து
வாழ்ந்த அந்த வாழ்க்கை !!
ஒவ்வொரு நாட்களும் தேன் !
சூரிய ஒளி
கண்ணில் பட விழித்தேன் !
இந்த கனவு நினைவாக
இன்றாவது காதலை
சொல்லி விட வேண்டும் !!
தைரியமின்றி
சபதமெடுத்தேன்
நூறாவது முறையாய்