ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி!
எம்.ரிஷான் ஷெரீப்
மலைக் காடொன்றின் மத்தியில்!
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்!
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது!
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு!
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி!
நீ காதலைச் சொன்ன தருணம்!
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது!
சின்ன மேசையருகே முழந்தாளிட்டு!
நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது!
சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில்!
நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ!
மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன்!
பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர!
நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள்!
முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை!
சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்!
அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய்!
என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய்!
எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம்!
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி!
உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது!
என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது!
நீ இசைத்து வந்த வாத்தியக் கருவியை!
அன்றோடு எந்த தேவதை நிறுத்தியது!
உன்னிலிருந்தெழுந்த இசையை!
எந்த வெளிக்குள் ஒளிந்த பறவை விழுங்கிச் செரித்தது!
மழைக் காலங்களில் நீர் மிதந்து வந்து!
விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி!
பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதியொன்றிருந்த!
எனது கிராமத்தின் கதையை!
இக் கணத்தில் உனக்குச் சொல்ல வேண்டும்!
ஊரின் முதுகெலும்பாய்ப் படுத்திருந்த மலையின் ஒரு புறம்!
சமுத்திரமும் இருந்தது!
வாழ்நிலங்களைக் காக்கவென மூதாதையர்!
அம் மலையைக் குடைந்து இரண்டாக்கி!
ஆற்றின் தண்ணீர்ப் பாதையை!
கடலுக்குத் திருப்பிய கதையையும்!
கூடைகூடையாய் தொலைவுக்கு கால் தடுக்கத் தடுக்க!
பெண்கள் கல் சுமந்து சென்று கொட்டிய கதையையும்!
இரவு வேளைகளில் விழி கசியச் சொன்ன!
பாட்டி வழி வந்தவள் நான்!
அந்த மன உறுதியும் நேசக் கசிவும் ஒன்றாயமைந்த!
நான் மிதக்கும் தோணியை ஒரு பூக்காலத்தில்!
ஏழு கடல் தாண்டித் தள்ளி வந்திருக்கிறாய்!
உனது எல்லா ஓசைகளையும் மீறி!
'உஷ்ணப் பிராந்தியத்தில் வளர்ந்த செடியை!
குளிர் மிகுந்த பனி மலையில் நட்டால்!
ஏது நடக்குமென நீ அறியாயா' எனப் பாடும் இராப் பாடகனின் குரல்!
தினந்தோறும் இடைவிடாது எதிரொலிக்கிறது!