தெய்வமொன்று நேரில் வந்து !
'வரமொன்று தருகிறேன்' என்றது.!
நம்புங்கள், தமிழில் தான் பேசியது. !
வியப்பான வினாவுடன் பார்த்தேன்.!
புரிகிறது, இருப்பதே என்னிடம் ஒன்று தான் !
ஒன்றுக்கு மேல் கேட்டு விட்டால்?!
சரிதான். கொடுத்தே நொந்து போயிருக்கும் போல.!
வரம் பலிக்க வேண்டுமென்றால் !
எனக்கொன்று செய்யவேண்டும் ... !
அது தானே பார்த்தேன்.... !
நான் நான்கு கோப்பையை தருகிறேன் !
ஒன்றில் தூயபாலை நிரப்பவேண்டும்!
நிரப்பினேன்.!
அடுத்ததில் தூயமது.....!
இடைமறித்தேன்; நிரப்பினேன்.!
உற்று என்னை கவனித்தபடி !
மூன்றாவதில் மனித ரத்தம்...!
நொடியில் நிரப்பினேன். !
நான் மனித ரத்தம் கேட்பது !
உனக்கு அதிர்ச்சியை தரவில்லையா ... ?!
'இல்லை. பழக்கப்பட்டுவிட்டது. !
புத்தனின் பெயராலேயே இங்கு ரத்தம் குடிக்கப்பட்டது. !
பிறகென்ன ... !
நொடியில் நிரப்பிய காரணமும் அதுதான்'!
தெய்வம் மெளனமானது. !
நான்காம் கோப்பையை காட்டி !
தூய மழைநீர் ... என்றபடியே மறைந்தது. !
தூக்கி வாரிப்போட்டது எனக்கு.!
பித்தேறி வெற்று கோப்பையுடன் அலைகிறேன் !
உங்களிடம் இருந்தால் தாருங்கள் ...!
தருபவர்களே வரத்தையும் எடுத்துக்கொள்ளலாம் !
தருவீர்களா ... ?

வேல் கண்ணன்