தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாழ்வியற் குறட்டாழிசை

வேதா. இலங்காதிலகம்
பெற்றோர் உயர்ச்சி!
உலக உறவின் ஆரம்பச் சுருதி!
உன்னதமான அம்மா அப்பா.!
அன்புப் பெற்றோர் அனுபவ மொழி!
வென்றிடும் வாழ்விற்கு ஏணி.!
மதியற்று மனிதன் அந்நியமாய் பெற்றோரை!
மதித்தால் அவன் அற்பன்.!
பெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை!
குற்றப் பாதையை நாடான்.!
வாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்!
தாழ்விலா வாழ்வுடைய பெற்றோர்.!
கற்று உயர் பதவி வகித்தென்ன!
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.!
உயர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு!
துயர்வற்ற படகுத் துடுப்பாகும்.!
கனிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல!
துணிவு தரும் தோழராகிறார்.!
இறைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து!
கறையற்ற தூண்டாமணி விளக்குகள்.!
நன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்!
நற்பெயர் காத்தல் பிள்ளைகட்கழகு

பொறாமை.. தேடல்.. கருவறை

பிரதீபா,புதுச்சேரி
01.!
பொறாமை !
-------------!
உன்னிடம் ஓயாமல் பேசும் !
என் இதயத்தின் மீது பொறாமை!
என் இதழ்களுக்கு......!
02. !
தேடல்!
---------!
தேடல்!
என் கண்களுக்கு மட்டும் அல்ல!
உன் கால் தடம் தேடும்!
என் பாதங்களுக்கும் தான்...!
03.!
கருவறை!
-------------!
உன்னை நினைத்த மாத்திரத்தில்!
நான் கற்பவதி ஆனேன் !
என் இதய கருவறையில்!
ஜீவனாய் நீ உதித்தாய் வளர்ந்தாய்!
பேறுகாலம் அற்று

துயர் துடைக்கும் விரல்கள் கொடு

எம்.ரிஷான் ஷெரீப்
இறகுகளற்ற தேவதையவள்;!
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,!
அலங்கார வார்த்தைகளோ,!
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்!
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ!
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !!
ஆனால்...!
அவள் பிரசவித்த விழிநீரே!
துளித்துளியாய்ச் சேர்ந்து,!
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,!
அவளுக்கான எல்லைகளுடைத்து!
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க!
மீண்டும் மீண்டும் !
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே!
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது!
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !!
தனிமையின் கொடுவாய்க்குள்!
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு!
காயங்களைப் போர்த்தி!
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்!
கொண்டு போ ராசகுமாரனே!
அந்த மலைகளைத் தாண்டி...!!
மாய உலகின் கரங்களை விலக்கி !
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்!
தூதனுப்புகிறேன் !
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்!
குளிர்ந்த சோலைகளின்!
அழகிய பெருவாழ்வை!
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!!
சாபங்கள் சூழ்ந்த !
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்!
ஆகப்போவது ஏதுமில்லையெனக்!
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !!
அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை!
காற்றுடன் கலந்து போயொரு நாள்!
சூரியனை விழுங்கிவிடும்,!
நிலமிருட்டிப் பாதம் உதைக்க!
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்!
நாளது வெகுதொலைவிலில்லையென்ற!
அச்சத்தில் நடுநடுங்கியே !
நானிதனை எழுதுகிறேன் !!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

ஊருக்குப் போகிறேன்.. வெற்றிஉண்டு

சு.திரிவேணி, கொடுமுடி
01.!
ஊருக்குப் போகிறேன் !
--------------------------------!
ஊருக்குப் போகிறேன் நான். !
அழகான பெயர்ப் பலகை தாங்கிய !
காப்பி ஷாப்புகள் அங்கில்லை. !
விருப்பத்தாலோ கட்டாயத்தாலோ !
விட்டுப் போன உறவுகளைக் !
கட்டிஇழுக்கும் இமெயில் !
வசதியும் அங்கில்லை. !
ஆனாலும் எங்கள் ஊர் அழகானது. !
சலிக்க வைக்கும் சில்லறைச் சண்டைகள் !
இருந்தாலும் சீரியல் பார்த்தபடி !
வரவேற்கும் கொடுமை அங்கில்லை. !
காப்பிக்கும் சக்கரைக்கும் வந்து விடுவார்களோ !
என்ற பயத்தில் கதவடைத்துக் !
கிடக்கும் தனிமை இல்லை. !
எந்த வீட்டு உறவென இனம் பிரிக்காத !
பொதுவுடைமைச் சமூகம் அது. !
நீண்ட நாட்களுக்குப் பிறகு !
ஊருக்குப் போகிறேன். !
அடையாளம் கண்டு ஊரே !
நலம் விசாரிக்கக் கூடும்! !
வீட்டைக் கை விட்டாயே !
எனக் குற்றம் சாட்டக் கூடும்! !
இந்தக் கேள்விக்கு மட்டுமல்லாது !
பெரும்பாலான ஊர்க் கேள்விகளுக்கு !
சிரிப்பே பதிலாய் அமையக் கூடும்! !
பேருந்து நிறுத்தத்தில் !
இறங்கினேன் நான்.!
யாருமில்லை அங்கே. !
ஏமாற்றமாக இருந்தது !
ஏக்கமாகக் கூட!!
காளான் போலக் கடைகள் !
நிறைய முளைத்திருந்தன. !
காசை வாங்கிப் பொருளைத் !
தரும் கைகள். !
எப்போதும் மும்முரமாய்!
மனிதர்கள். !
முகம் பாராமல் வாய்கள் !
மட்டுமே பரிமாறும் வார்த்தைகள். !
அடைத்தே கிடக்கும் வீடுகள். !
என் ஊரில்லை இது! !
இடம் மாறி இறங்கியிருக்கிறேன்!! !
இல்லாவிட்டால்... !
பூக்களுக்குள் வீடு கட்டிப் !
பட்டாம் பூச்சியால் எப்படிச் !
சிறையிருக்க முடியும்? !
!
02.!
வெற்றிஉண்டு!!!
--------------------!
மெல்ல உயர்கிறது தீ!
ஆகுதியாய்த் தன்னைக்!
கொடுத்து வளர்த்தும்!
எண்ணயைத் தின்றே!
கொழுக்கிறது சுடர்.!
மையம் உயர்தலும்!
பக்கம் தாழ்தலும் என்று!
நெருப்பிலும் உண்டு ஏற்றத்தாழ்வு!!
உள்ளே ஒன்றுமாய்!
வெளியில் வேறுமாய்!
மாறுபட்ட முகம் காட்டும்!
மனிதன் போலத்தான் தணலும்.!
உருமாற்றம் உண்டோ இல்லையோ!
நிறமாற்றம் காட்டுவதுண்டு!!
எதைக் கொண்டு உயர்ந்ததோ!
அதை ஏறி மிதித்து!
அழிக்கவும் தயங்குவதில்லை.!
இந்த உலகில் -!
வல்லவர்களுக்குண்டு வெற்றி!
வாழ்விக்கும் நல்லவர்களுக்கல்ல

அன்றிலிருந்தே.. விண்முட்டிய.. என் கவிதை

வித்யாசாகர்
அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி... விண்முட்டிய கண்களுக்குள்; மீண்டுமொரு கனவு’ முட்களுக்கும், ரோஜாவிற்குமாய்.. !
!
01.!
அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..!
----------------------------------------------------------------!
கண்களில்!
ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..!
மழை சுட்டதும்!
வெயில் நமை நனைத்ததுமான!
அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. !
இமைநிறைய கனவும்!
உயிர் நெடிய பயமுமாய்!
பதற்றமுற - !
நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த!
அந்த நாட்கள் அத்தனையும்!
அத்தனை மரணத்திற்குச் சமமானவை..!
நம்பிக்கையின் அடிவேரெடுத்து!
நம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்!
நம் விழித்தேயிருந்த கண்களில் -!
வலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..?!
பிறகெப்படி உனக்கு நானும்!
எனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்!
நமக்குப் புகட்டியதோ இந்த!
சதிகார உலகம்.. (?)!
பார்த்தால் பார்த்துவிட்டு!
சிரித்தால் சிரித்துவிட்டு!
முத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல!
நீயும் நானுமெனப் புரியவைக்க -!
நான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்!
ஒருவேளை சாட்சியாக நிற்கலாம்..!
நானேனும்.. பெரிதில்லைப் போகட்டும்!
ஆனால் நீ பாவம்..!
நீ அழுவாய்!
சிரிக்க மறுப்பாய்!
வாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்!
உணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி!
உனக்குள்ளே வியாபித்துப் போயிருக்கும்,!
எனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்!
உன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய், !
யாரிடமும் பேசிடாத மௌனத்தில்!
வலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,!
உயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென!
நம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ!
ச்ச..!
காற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்!
ஒரு நாணல் போல!
வெறுமனே அசைந்து!
உடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு!
எப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது?!
ஒசந்த ஜாதியும்!
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பும்!
மனிதரை நிறம்பிரிக்கும் மதமும்!
மனசு கொன்றுபோடும் மயானமொன்றில்!
எந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (?)!
இலகுவாய் -!
பெற்றதன் வரத்தில்!
புதைத்துவிடும் நம் ஆசைகளை!
பெற்றோரே புரியும் - நாளெந்த நாளோ.. ?!
திரும்பினால் தேடி!
நடந்தால் அறிந்து!
பேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்!
நேசிப்பில் எதையெடுத்து இம்மக்கள்!
நமக்கு எதிராய் கொள்கின்றனரோ ?!
மரணம் உதறி மரணம் உதறி !
இன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி!
பிரிந்தே !
உயிர்த்தேக் கிடப்பதோ?!
வலியாய் வலிக்கிறது அன்பே!
பிரிவு கொடிது!
அதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்!
சதியின் பிரிவு மிகக் கொடிது; !
உண்மையில் -!
நாம் பேசிக்கொண்ட நாட்களைவிட!
நீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்!
இதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய!
நினைவின் வலி என்று -!
இப்படி வெறும் காகிதங்களில்!
மட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..!
கிழிக்க கிழிக்கச் சேரும் !
குப்பைகளின் நெரிசலில் நகரும்!
பார்வைகள் -!
இதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..!
!
02.!
விண்முட்டிய கண்களுக்குள்; மீண்டுமொரு கனவு’ முட்களுக்கும், ரோஜாவிற்குமாய்.. !
---------------------------------------------------------------------------------!
உடம்பெல்லாம் சிறகு முளைத்த தருணமது;!
பறந்தொரு தினம் வெற்றியின் தலையிலமர்ந்த!
மரணம்போல்; தனிமை தகிக்க தகிக்க நின்ற பொழுது அது;!
வானம் நீண்டு விரிந்த பரந்தவெளிச் சாலையொன்றில்!
மேகங்களெல்லாம் – எனை!
அண்ணாந்துப் பார்த்துச் செல்ல,!
நான் எட்டிய உயரத்தின் கடைவிளிம்பிற்குச் சென்று!
தரை தேடி!
கையில் அழுந்த மூடியிருந்த!
நம்பிக்கையெனும்!
ஒற்றை ஏணி பிரித்து – எனைத் தூக்கி நிறுத்திய!
உயரத்திலிருந்து கீழே தலை தாழ்ந்துப் பார்க்கிறேன்!
பூமி கடுகென சிறுத்துப் போயிருக்க -!
சறுக்கி சறுக்கி விழுந்த நாட்களை!
அடுக்கி அடுக்கிச் சேகரித்த ஏணி – இனி!
கீழுள்ளவருக்காய் பயன்படுமென எண்ணி – என்!
நம்பிக்கை மொத்தத்தையும்!
அனுபவச் சட்டங்களால் கட்டி!
தூக்கித் தரையில் வீசப் பார்கிறேன் – தரையில்!
கடுகென சிறுத்த பூமியின் தலையில்!
ரோஜா பூக்கள் சிரித்துக் குலுங்கிக் கொண்டிருந்தன!
முட்கள் அதற்கு காவல்நின்று!
காதலால் ரோஜாவை மணக்கச் செய்தன;!
முட்களின் முதுகிலோ –!
ஒது தேசத்தின் ஏக்கம் கொட்டிக்கிடந்தது;!
இன்றைக்குள் நாளையை சேகரித்துக்கொள்ளும்!
கனவு பல காத்துக் கிடந்தது;!
எரியாவிளக்கின் இருட்டிலிருந்து – நெருப்பில்!
கருகிய உடலின் காரணம் வரை’!
அந்த முட்களின் சோம்பலில் முடங்கிக் கிடந்தன;!
இலக்கியம்!
இனப் பற்று!
ஆராய்ச்சி!
மொழியுணர்வு!
புதிய கண்டுபிடிப்பு என!
எந்த வெங்காயத்தின் மீதும் அக்கறையின்றி!
பூத்துக் குலுங்கிய ரோஜாவின் மடியில் தலைவிரிக்கவே!
முட்கள் கனவு கண்டன; காத்துக் கிடந்தன;!
மொழி நம் அடையாளம்!
தாய்மொழி நமை ஈன்றவளின் பெருமைக்கு நிகர்!
தமிழ் நம் பிறப்பின் பேறு என்பதையெல்லாம் மறந்து!
குழல் இனிது!
குடி பெரிதென!
லட்சியமின்றி வாழ்ந்த நாட்களையெல்லாம்!
குப்பிகளில் நிரப்பி’ ரோஜாவின் பெயர் திணித்து!
வெறுமனே வாழ்க்கையை கடந்துத் தீர்த்தன;!
இனக்கவர்ச்சியை உயிரென்றும் –!
உடல் பொருள் ஆவியென்றும் சொல்லி!
ரோஜாவிற்கென முட்களும்!
முட்களுக்கென ரோஜாக்களும் ஆங்காங்கே!
ரயில் தண்டவாளத்தில் தலையைக் கவிழ்த்தன;!
அணுப்பொழுதும் பிரிந்து வாழ!
கனவில் கூட எண்ண மறுத்து -!
அம்மா அப்பாக்களை மட்டும்!
அனாதை விடுதியில் தள்ளின;!
அக்காத் தங்கைகளின்!
கட்டப்படாத தாலியை!
வரதட்சணையால் அறுத்தன;!
கைம்பெண்களின் கண்களில் காம!
ஈட்டி வைத்துக் குத்தி -!
குடித்த போதைக்கு ருசிசேர்க்க!
தெரு வம்பையெல்லாம் விலைபேசி வாங்கின;!
போர் போரென மாண்டலும்!
அரசியல் அடி தகர்ந்து நாம் வீழ்தலும்!
மனிதரின் ரத்தம் லஞ்சத்தால் குடிக்கப் படலும்!
கலை மூழ்கி நம் பாரம்பரியம் மூழ்கி!
கலாச்சாரமெல்லாம் ஆடம்பர ஆபரனங்களுக்குள்!
அடங்கிப் போவதுமெல்லாம் -!
ரோஜாவின்’ முட்களின்’ கண்களில் கொஞ்சமும்!
குத்தவில்லை;!
ரோஜாவிற்கு பரிசளிக்க அஞ்சரப்பெட்டி!
அடகுக்குப் போனதும்,!
காதலனுக்கு காத்துக் கிடக்க அப்பாவின் நம்பிக்கை!
அரைநாள் விடுமுறையானதும்; அத்தனைப்பெரிய!
குற்றமாக அவர்களுக்குத் தெரியவேயில்லை;!
கடல்பொங்கி உடல் மிதப்பதும்!
கரைதாண்டி உயிர் மரிப்பதும்!
மழை வந்து மனிதம் நனைவதும்!
வாடிக்கையாய் போனதில் மனம் முட்களுக்கும் ரோஜாவிற்கும்!
கல்லாய் ஆயின -!
சோற்றிற்கு பிள்ளைகள் தட்டேந்தி!
திருடி!
கொல்லையடித்து!
கொலை செய்து!
பொய்யும் புரட்டுமாய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை!
தடுக்க’ திருத்த’ எள்ளளவும் அவர்களுக்கு எண்ணமில்லை;!
யாருக்கு இருக்கோ இல்லையோ!
எனக்கு கோபம் தலைக்கேறி வந்தது!
நேரே சென்று அவர்களின் கன்னம் பிடித்து!
இழுத்து நான்கு அரை விட்டாலென்ன என்று கோபம்!
பொங்கி பொங்கி வந்தது;!
பொங்கிய கோபத்தின் பதட்டத்தில்; கை நடுங்கி!
அந்த நம்பிக்கையெனும் ஏணி!
திடுமென கை நழுவி தரைவழி விழ –!
நான் தடுத்து பிடித்துவிடவெல்லாம் முனையவில்லை;!
ஏதேனும் ஒரு ரோஜா!
முட்களைச் சுமந்தேனும்!
அந்த ஏணியின் வழியே ஒரு நாள்!
இங்கே வராமலாப் போகும்?!
வரட்டும் வரட்டும்!
வரும்வரைக் காத்திருப்போமென விட்டுவிட்டேன்…!
!
03.!
என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..!
--------------------------------------------------------------!
இதயம் இடிந்துவிழுந்த இடத்தில்!
பிறக்கிறது கவிதை,!
ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம்!
வடிக்கக் கேட்கிறதென் கவிதை;!
காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம்!
வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை,!
காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில்!
கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக் கேட்கிறதென் கவிதை;!
இடைவெளிவிட்டு வளர்த்த பண்பின் தெளிவுறா!
மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை,!
இளைய பருவத்தில் கண்ட உலகை, பாதி கைவைத்து மறைத்த!
பகையோரை எண்ணித் தகிக்கிறதென் கவிதை;!
குடும்பம், காதல், வெற்றி, பணம் பணம் பணமென்று!
திரியுமொரு சுயநல திணித்தலை எதிர்க்கத் துடிக்கிறது கவிதை,!
பிறரை, பிறர் வலியை, ஒரு மலர் கசங்கும்!
சூழலைக் கூட தவிர்க்கக் கெஞ்சுகிறதென் கவிதை;!
இனம் மானம் அறிவு மொழிதனை!
உணர்வினில் உயிர்பதிக்க உருகொள்கிறது கவிதை,!
உலகின் பார்வைக்கு நிறம் மாறி' தன் உணர்வறுந்துப் போனோரை !
எழுத்தின் கூர்மையில் செவ்வனேச் செதுக்கப்பார்க்கிறது என் கவிதை;!
வரலாறு தெரியாத, தெரியத் தராத, தெரிய முனையாத!
என் பிள்ளையிலிருந்து பாட்டனைவரை எதிர்க்கத் துணிகிறது கவிதை,!
இனி வரும் காலத்திலேனும் - நகர்வின் துளி நிழல்களையும்!
நாளைக்கெனச் சேகரிக்க சுயசார்பு துறந்து பிறக்கிறதென் கவிதை!!
மதிக்கத் தக்கவன் மனிதன், மன்னிக்கத்தக்கவன் மனிதன்!
அன்பிலும் பண்பிலும் ஏன் அடிநெருப்பிட்டால் எரிந்து எட்டி!
சூரியனையும் சுடத்தக்கவன் மனிதன்' என்றுணர், நம்பு,!
நம்பினால் உன்னால் எல்லாம் முடியுமமென்கிறது என் கவிதை;!
மொழி உணர்வு கொள், இன உணர்வு கொள், மனிதம் பரப்பு!
உலக அரங்கில் தெளிவின்முகத்தை தமிழராய் பதிய வை; !
காட்சிகளில் பதிந்த வலியை தன் வெற்றிகளால் துடைத்து எறி!
காணுமுலகம் காணுமோர் நாள் நாம் மூத்தக் குடியெனப் புரி;!
என்று எழுத்தில் கர்ஜிக்க இயல்பில் பிறக்கிறதென் கவிதை

ஓலைக்குடில்

ப. கரிகாலன்
கடல் உப்புக்காற்று சில்லென மேனி தடவ !
உச்சி வெய்யில் உசிரை உலுப்ப!
துடுப்பின் வலிப்பில் !
நீரினோசை நிசப்தத்தை !
நிர்மூலமாக்க!
கடல் நாரைகளின் நாட்டம் !
படகின் மீன்களை நாட!
கரையைத் தேடி!
ஓய்வின்றி வலிக்கின்றான்….!
நிலையற்ற இவ்வாழ்வில்!
நிம்மதி தேடும் ஈழத்து மீனவன்!
ஓலைக்குடிலில் ஒரு கஞ்சி சோற்றுக்கு!
நாய் படாப்பாடு என எண்ணத் !
தோன்றாதவனாய்!
கடலன்னையின் அரவணைப்பில்!
பழகிப்போன அவன் வாழ்வில் நித்தமும்!
ஒரு நம்பிக்கை பெருமூச்சு.....!
ஈழப்போரிலும்!
ஆழிப்பேரலையிலும் !
உருக்குலைந்த வாழ்க்கையை!
செப்பனிட நாதியற்றவனாய்...!
ஏலேலோ ஐலசா காற்றினில் மிதந்துவர!
அவன் மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்!
கரையைத்தேடி படகை வலிக்கின்றான்…

மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
!
கலைந்தோடும் கனவுகளாய்!
காற்றோடு மறையும் புகையாய்!
காரிருளில் புதையும் பகலாய்!
கடக்குது ஒரு வருடம் இங்கே!
கால்கடுக்க ஓடி உழைத்து!
காலமெனும் கடலில் நீந்தி!
கன்னத்தில் கண்ணீர் கோடுகளோடு!
கழித்து விட்ட வருடம் கழியுது!
நிறுத்த முடியா காலக்கடியாரம்!
நிறுக்க முடியா நிகழ்வுகளோடு!
நிறைக்கும் அனைவரின் நெஞ்சங்களை!
நிஜமாய் மறையுது வருடமொன்று!
சிலரின் வாழ்வில் கண்ணீரும்!
சிலரின் வாழ்வில் பன்னீரும்!
சிலரின் வாழ்வில் செந்நீரும்!
விளக்கமுடியா விளைவுகளே!
நீயென்ன சொன்ன போதும்!
நானென்ன செய்த போதும்!
யாரென்ன முயற்சித்தாலும்!
உலகம் உருள்வது உருள்வதுதான்!
முதிர்ந்த உள்ளங்கள் உணர்ந்ததை!
முளை விட்ட உள்ளங்கள் அறிந்திடவே!
அனைவரும் ஒன்றாய் இணைந்து இங்கே!
அறிவைப் பகிர்வோம் அவனிதனிலே!
உலகம் மிகவும் சிறியதுதான்!
உனக்கும் அங்கே உழைக்கும் தேவை!
உயர்ந்து நீயும் உலகை உயர்த்து!
உயரும் நாளைய ஏழையின் வாழ்க்கை!
மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்!
மேகக் கூட்டம் கலையுது வானில்!
நாளைய உலகம் வெளிக்குது!
நம்பி நாமும் நுழைவோம் அதனுள்!
அன்புடன்!
சக்தி சக்திதாசன்

ஒளிமயமே

பத்மநாதன் உதிஸ்ரா
உறவுகட்கு உயிரெழுத்தாய் !
எத்தனையோ சொந்தங்கள் !
வேதனையில் விரக்தியில் !
விழி சொல்லும் கவிதைகளில் !
நான் மட்டும் நடுவிலே !
நாதியற்ற அனாதையாய்! !
நின்றிருந்த வேளை தன்னில் !
இருளகற்றும் ஒளியைப்போல !
வந்தனரே சூரியக் குழந்தைகள் !
ஏற்றினார் எம் வாழ்வின் சுடரதனை !
இனியெல்லாம் ஒளிமயமே................ !
!
-பத்மநாதன் உதிஸ்ரா !
****** !
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்

ஒரு தேவதையும் சில சாத்தான்களும்

எம்.ரிஷான் ஷெரீப்
எந்த ஆரூடங்களாலும்!
ஊகிக்கவே முடியாத!
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு!
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !!
இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்!
புராதனக் குடியிலிருப்பிலின்னும்!
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ!
சொல்லிச் சொல்லியழுத வேளை,!
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத!
சினக் கனலொன்று என்னுள்!
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !!
உனது விரல்கள் வடிக்கும்!
உக்கிர ஓவியங்களைப் !
பார்த்து,ரசித்து - உன்னை!
உச்சத்தில் வைத்திடக் காலம்!
பலபேரைக் கொண்டிருக்கையில் ;!
எந்தச் சத்தியங்கள்!
சகதிக்குள் புதைந்தனவோ...!
எந்த வீரப்பிரதாபங்கள்!
வெட்டவெளியிலலைந்தனவோ...!
எந்த சுபவேளை கீதங்கள்!
ஒப்பாரிகளாக மாறினவோ...!
எந்தப் பிசாசுகள் உன்னில்!
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...!
அத்தனையும் இன்னுமேன்!
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?!
உன் விழி துடைக்க - பிற!
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து!
ஒற்றை இறகாவது நீளும் ;!
உன்னை உறங்கச் செய்யும்!
மந்திர வித்தையொன்றைக்!
காற்றும் ஒருநாள் ஏகும் !!
நம்பு !!
அன்றைய தினமதில் !
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்!
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க!
சவால்களனைத்தையும் விழுங்கி!
உன் மேனி சிலிர்த்து!
ஆதிகாலந்தொட்டு வரும்!
அத்தனை காயங்களையும்!
ஒரு கணத்தில் உதறுவாய் !!
வீழும் வலியனைத்தும் படபடத்துச் !
செத்துமடியும் - பிசாசுகளின் !
எல்லை தாண்டிப் பறந்த உன்னை!
நண்பர்களின் உலகம் !
கைகோர்த்து வரவேற்கும்!
அப்பிரகாச நாளில்!
என்னை மறந்திடுவாயா சினேகிதி?!
- எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்

ராமலக்ஷ்மி
பெற்றவள் விற்றா விட்டாள்!
சொல்கிறார்கள் குற்றமாய்!
ஆயினும் எவருக்கும்!
தெரியவில்லை சரியாய்!
தொற்றிக் கொள்ளத்!
தோள் தேடிக் கிளியே!
கேள்விக் குறியாக நீ!!
!
கத்தை கத்தையாய் கண்ணே!
நோட்டுக்களைக் கைமாற்றி!
நோகாமல் உனைக் கையாளத்!
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட!
தோள்கள் துவண்டு போய்!
தொங்கி விழும் தலையுடன்!
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!!
!
தயக்கமே இல்லாமல்!
தடயங்களை மறைத்துத்!
தகவல்களையும் இடம் மாற்றி!
தடுமாற்றமே இல்லாமல்!
தந்திரமாய் விலை பேசும்!
தரகர் கும்பல் இவர்கைகளிலே!
தத்தளித்திடும் தளிரே - உண்மையிலே!
'தத்து' அளித்திடத்தான்!
தரப் பட்டாயா நீ ?!
!
கலி என்பது இதுதானோ!
கற்றவரும் துணையாமே!!
காலம் எங்கே செல்கிறதென!
கலக்கம் சூழுதிங்கே கலைமானே!
கவலை அறியாது நீ!!
!
கொடுமை கண்டு அடங்கவில்லை!
கொந்தளிப்பு இங்கெமக்கு!
சந்தையிலே விற்கின்ற!
கொத்தவரங்காயா நீ ?!
!
மருத்துவமனை வளாகத்திலேயே!
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்!
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்!
மருந்து மயக்கத்தில் நீ!!
!
காவலரால் மீட்கப் பட்டு!
கரை சேர்ந்ததாயென செய்தி!
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்!
உறக்கம் வந்தது எமக்கு!
நிறைவாய் ஒரு!
வாக்கியம் உனக்கு!
இனியேனும் இனிதாய்!
வாழ்ந்திடுக நீ!!
!
குற்ற உணர்வென்பது!
கொஞசமும் இன்றிக்!
குப்பைத் தொட்டியிலும்!
இடுகாட்டு வாசலிலும் கூட!
இட்டுச் செல்கிறாராமே உனைப்!
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை!
விடிகின்ற காலையோடு!
விடிந்து விடும் உம்வாழ்வுமென!
விட்டிடலாம் கவலைதனை!
எவரேனும் கண்டெடுத்துக்!
கரை சேர்ப்பாரென-!
இரை தேடி இரவெல்லாம்!
சுற்றி வரும் நாய்களிடம்!
மாட்டி மடிய நேர்ந்தால்!
என்னவாகும் எனும்!
பின்விளைவுகளைப் பற்றிய!
சிந்தனை சிறிதுமின்றி...!!
!
எட்டி யோசிக்கட்டும்!
பூக்கள் உம்மைப்!
புறக்கணிக்கும் செடிகள்.!
!
ஆம் சில செடிகளுக்கு!
பல கொடிகளுக்கு!
பூக்களுடனான பந்தம்!
தொடர்ந்திடக் கொடுத்து!
வைப்பதில்லைதான்.!
!
வறுமை முதல் வெறுமைவரை!
வெவ்வேறு காரணங்களால்!
அடித்து வீசும் காற்றாகவும்!
சுழன்று வீசும் புயலாகவும்!
வாழ்க்கையை விளையாடிவிட்ட!
விதியின் சதியினால்!
துளிர்க்கின்ற தளிர்களைத்!
தம்மோடு வைத்துக்!
கொள்ள வழியற்ற-!
அச்செடிகொடிகள்!
அரசுத் தொட்டிலிலோ!
ஆதரவற்றோர் இல்லத்திலோ!
உம்மை உதிர்த்துச் சென்றால்-!
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்!
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு!
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்!
வழிவகை பிறந்திடுமே