விண்ணிலிருந்து கோமகன
பவித்திரா
். !
அன்புடை அக்காமாரே! அறிவுடை அண்ணாமாரே!!
அழகுதமிழ் பேசுகின்ற இளையதம்பி தங்கைகளே! !
இன்புறு ஈழத்தாய் இனிதே ஈன்றெடுத்த !
எழில்மிகு தமிழினமாய்ப் புவிதனில் வந்துதித்தோம்!
தன்புக ழோங்கிடத் தலைவனொடு துணையெனத் !
தகைசார் வீரரைத் தந்தளித்த தமிழன்னை !
அன்னவரிற் சிலபேரைச் சிலகால விடுமுறைக்காய் !
அனுப்பினள் ஆண்டவன் திருவடி நிழலிற்கே! !
!
இவர்களுடன் இளையோனும் இங்கிதமாய் இணைந்துள்ளேன் !
ஏற்றகல்வி தொழில்நுட்பம் எல்லையிலாப் போர்க்கலைகள், !
கவின்மிகு கவித்துவம் கணக்கிலாக் கலைஞானம் !
கடமை கண்ணியம் கட்டுப்பாடு நல்லொழுக்கம் !
இவையாவும் இவ்விடத்தே இயல்பாய் இழையோடி !
இணையற்ற சோதரர்பால் இசைந்திருக் கையிலே !
அவர்களின் தம்பியென அன்பனாக நானொருவன் !
ஆதரவு பெற்றிங்கு ஆனந்தமாய் வாழ்கின்றேன். !
!
விதைகளா யாகிய வீரரிவரிற் பலரங்கே !
விருட்சமென வளர்தற்காய் விடைபெற்று வந்துள்ளார்!
கதையல்ல சோதரரே கற்பனையும் இவையல்ல !
கடமைகள் இவர்க்கிங்கு கணிசமாய் முடிந்திடவே !
உதயமாகும் தமிழீழம் செப்பனிடப் புறப்பட்டார் !
உத்தமர்தம் மகத்துவத்தை ஊர்சென் றறிவீரே! !
இதமான வாழ்வியல் இன்பங்கள் துறந்து !
இளையோன் யானும் விரைந்தங்கு பிறந்திடுவேன்! !
!
பிறக்கமுன் சிலவார்த்தை பிரியமான சோதரரே! !
பிரதாபம் பேசுகின்றான் பின்னவன் இவனென்றே !
சிறந்தவும் சிந்தையில் சிறிதேனும் எண்ணிடாதீர் !
சிந்தனைக்கு நான்வழங்கும் சீரியவா சகங்கள் !
மறம்நிறை மக்கள்நாம் மாண்புடை யினமென !
மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா னொத்தரென !
இறையவன் உலகிதில் ஈங்கிவர் இயம்புகின்றார்! !
ஈடில்லாப் புகழ்தனில் இலங்கிட வாழ்த்துகின்றார்! !
!
தாயகம் துறந்தங்கு சீவிதம் புரிபவ, !
தம்பியென் சொற்களைச் சற்றுநீர் செவிமடுப்பீர்! !
மாயையில் மூழ்கிடும் மானிடர் சிலராங்கே !
மறக்கவும் துறக்கவும் துணிந்தனர் தமிழ்தனை !
சேயிடை செந்தமிழ் நாவதனைத் துண்டித்தே !
சிறப்பென ஆங்கிலம் மட்டுமே புகுத்துகிறார்! !
காயதனை உண்ணுகின்றார்! கனிதனைப் புறக்கணித்தார்! !
கற்கண்டா யூட்டிடுவீர் தமிழமுதை மழலைகட்கே! !
!
கல்விதனை மேன்மையுறக் கற்றுவரும் உமக்கங்கு !
கடல்போற் பொறுப்புக்கள் கட்டாயம் உண்டன்றோ?!
செல்வம் கொழிக்கின்ற சீரான தேசமென்றே !
செகத்தினில் மாந்தரெலாம் செப்பியே வியந்திட !
பல்கலையும் பயின்றே பக்குவமா யுமதறிவைப் !
பாங்குடனே நம்நாட்டு விருத்திக்காய்ப் புகுத்திடுவீர்! !
எல்லையிலாப் பெருமையுடன் எம்தாயார் விளங்கிடவே !
இரவுபகல் விழித்திருந்து ஏற்றமுடன் உழைத்திடுவீர்!!
!
சமத்துவம் பேணிடுவீர்! சமரசம் காத்திடுவீர்! !
தார்மீக சமுதாயம் தழைத்திட விழைந்திடுவீர்! !
அமைதியொடு ஆக்கம், அன்புடமை, அறிவுடமை !
அணிகளாய்க் கொண்ட புதியயுகம் படைத்திடுவீர்! !
இமயமென நான்கொண்ட இலட்சியங்கள் நிறைவேற!
இங்கிருந்து வேகமாக உங்களுடன் இணைந்திடுவேன்!
தமிழீழ அன்னையவள் தாள்பணியும் திருநாள் !
தனயன் எந்தனுக்கும் தொலைவில் இல்லையே! !
!
(உலகத்தமிழர் மாணவர் அமைப்பிற் சேவையாற்றி, 1999ம் ஆண்டு மார்கழித் திங்கள் பதின்மூன்றாம் நாள் இறைவன் தாள்பற்றிய திருநிறை செல்வன் கோமகன் அவர்களின் மாணவர் சமுதாயத்தை நோக்கிய கூற்றாக இப்பாடல் அமைகிறது.)