தனித்த பயணத்தின் நெடுவழியில்!
என்னுடல் அறிந்தது!
ஒரு துளி ஈரத்திலிருக்கும்!
நதியின் பெருங்கருணையையும் ஆழவூற்றின் பேரன்பையும்.!
அக்கணம்,!
நீக்கமற நிறைந்த நீரின் கருணை!
சிறகை விரித்து அழைத்துச் சென்றது!
தனதுலகப் பெருவெளிக்கு.!
அங்கே!
ஈரத்தின் கருணையில் விரியும் ஓருலகைக் கண்டேன்.!
பச்சை மயமாகிய அவ்வுலகில்!
கனிகளும் மலர்களும் காற்றின் ரகசிய நடனமும்!
வாசனையும் இனிய சுவையும் குளிர்மையும்!
ஒளிமிகக் கொண்ட காலமும் இருந்தன.!
அவ்வெல்லையற்ற வுலகில்!
ஆழப்படியிறங்கிச் செல்லச் செல்லத்!
தன்னை வெளிப்படுத்தா நீரின் அழகு -!
பச்சைப் பெருக்கில் நெகிழ்ந்திருந்தது!
வனமாய், பயிராய், மலராய்க் கனியாய்...!
பின்னொருபோது,!
ஆகாய வெளியில் சிறகை விரிக்கத் தெரியும்!
நீரின் அழகெல்லாம் நீலமா பச்சையா? எனத் திகைத்த மனதில்!
ஒளிர்ந்தது, கருணையின் நிறமும் அன்பின் வர்ணமும்.!
நிறமேயில்லை நீருக்கென்ற தருக்கத்தின்!
நொறுங்கிய சிதறல்களில் ஒளிர்ந்தன!
அன்பின் வர்ணமும் கருணையின் நிறமும்.!
இன்னும்!
வர்ணமும் வாசனையும் தன்னுடலாய்க் கொண்ட மலர்!
ஒரு போது மலராயும் இன்னொருபோதில் கனியாயும்!
தன்னுடலை நெகிழ்த்துகிறது எல்லையற்று.!
வரண்டு நடுங்கிய உடலைத் தன்னிதழ்களால்!
நெகிழ்த்திக் குளிர்விக்கும் நீரின் பேராற்றல்!
கைவிட்டுச் செல்லும் மறதிப் பொருளின்!
மங்கிய நினைவல்ல.!
கனியின் நினைவாற்றல் மிகுந்த ஒவ்வொருதுளி நீரும்!
தாகத்தின் பெருநிலையில் வெடித்துக் கிளம்பும் பெறுமானச் சுவடுகளே

கருணாகரன்