தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதல் சுகமென்று...

எட்வின் பிரிட்டோ
காதல் சுகம்தான்...
வாழ்க்கையை வென்றவர்க்கு
காதல் சுகம்தான்.

ஆனால் இங்கே வயதையும்
வாழ்க்கையையும்
காதலுக்கென்று விற்று விட்ட
ஒரு கூட்டம்
காதல் சுகமென்றும், மற்றொரு கூட்டம்
காதல் சுடுமென்றும் சொல்லித் திரிகிறது

குடும்பத்தையும் நாட்டையும் தாங்கி
நிற்க வேண்டிய வலிமைத் தூண்கள்
முதுகெலும்புகளை களவு கொடுத்துவிட்டு
முகத்தில் முள் முளைக்க விட்டிருக்கிறார்கள்
காதல் தோல்வியாம்...

பூகம்பம் நிகழ்த்தப் பிறந்த இளைஞர்கள்
பூக்கள் மோதி உடைந்து போகிறார்கள்
கல்யாணத்திற்கு எதிராகவே பலர்
காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்
அந்த உள்ளங்களின் எதார்த்தம்
வெறும் இனக்கவர்ச்சியின்
இன்னொரு முகமாகிப் போனது

வாழ்க்கையின் அந்த வெயில் மறைவுப்
பிரதேசம் நமக்கு வேண்டாம் நண்பா.
உன் கனவுகளை கையெறி குண்டுகளால்
காயப்படுத்திய என்னைக் கண்டிக்கும் முன்
காதலித்துப் பார் என்று கத்திக் கொண்டிருக்கும்
கவிஞர்களை நகர்ந்து நிற்கச் சொல்.

இப்படி வா...
நாம் முதலில் வாழ்க்கையை
வாழ்ந்துப் பார்ப்போம்!

கரிசல் காட்டு வார்த்தைகள்

எட்வின் பிரிட்டோ
செங்கமல சிரிப்புல
சிந்தனைய செதச்சவளே
செங்காட்டு மண்ணுல
சேத்து என்ன மிதிச்சவளே
ஒன் மருதாணி கைவிரலு
மயக்கி என்ன இழுத்திருச்சு
மரிக்கொழுந்து வச்ச கொண்ட
மனசு தட்டி போட்டிருச்சு.

ஈசானி இருண்டப்போ,
இருவாட்சி பூத்தப்போ,
இசக்கி சமஞ்சப்போ,
இலந்த பழுத்தப்போ,
ஊத்து தண்ணிப் போல
உசுரு பூரா உன் நினப்பு.

ஒரு சோடி கொலுசால
மனசு அள்ளிப் போனவளே!
உன் கண்ணுக்கு மையா,
கண்டாங்கி நூலா,
கொசுவத்து மடிப்பா,
உங்கொப்பனுக்கு மருமவனா
ஆவதெப்போ ?

ஆசை மழை!

வல்வை சுஜேன்
ஆசை மழை ஊர்கோலம் அழைக்க!
அனுதினமும் நனைந்தேன் !
அந்த மழையில்!
சாரல் அணைத்து வர்ணங்களை !
பூசிக்கொண்டது என் மேல்!
மின்னும் வைரங்களை நீரோடையில் கண்டு!
அந்த வைரங்களையும் அள்ளிக் கொண்டேன்!
அக்கணமே, என்னை நானே இழந்தேன்!
தடாகத்தில் நின்ற தாமரையாழும் !
கொடியிடை வளைந்து சிரித்து !
வானுயர்ந்த தன் காதலனோடு !
யாடையில் மெளன மொழி பேசி!
என்னை பார்த்து கேலி செய்தாள்!
வளைகொண்ட நீர்ரலைகளோ!
மின்னிய வைரங்களை !
அள்ளி எடுத்து!
ஒளி குன்றா கீற்றோடு!
அந்த ஆதவனிடமே !
திருப்பிக் கொடுத்துவிட்டது!
வழி மாறிப்போன மனசு உரு மாறி !
உண்மை உணர்ந்து வெக்கித்து குனிய!
வானவீதியில் போன மேகங்களும்!
மெளனம் கலைத்து இடியோடு !
இணை மின்னல் எழுப்பி!
கொடும் மழை வீசி கடும் கோபம் காட்டின!
பூவுலகை காணவந்து புழுதியிலே வீழ்ந்ததினால்!
குடைக்குள் புகுந்திட எண்ணம் இல்லை!
மழையில் மூழ்கி மாசுதனை கழுவுகிறேன்

மனசுக்குள் வண்டு

வல்வை சுஜேன்
ஆசை எனும் அனலுக்குள்!
ஆதி மனிதன் வீழ்ந்தான், என்று!
பாதி வழியில் ஒருவன் !
பகுத்தறி வாளனாய்!
பகல் விளக்கை தந்தான்!
இரவின் விளக்கெடுத்து!
இவனடி நான் தொடர்ந்தேன்!
இவனுக்குள் வாழும் !
அந்த மீதி மனிதன் !
மாம் பூவுக்குள்ளும்!
மண், உயிராய் நுழைந்து !
தேகம் காட்டாமல்!
தேன்கனி உண்டு!
தெவிட்டிக் கிடக்கிறான்!
வெய்யிலே இவனை நீ!
சுட்டுப் போட்டாலும்!
விருந்துண்ணும் விழிகளினால்!
மின்மினிக் கருவறைகள் கட்டி!
ஆசை எனும் அருவியிலே!
அந்தியிலே தினம் நனைந்து!
மனசுக்குள் வண்டோடு!
மாந்தரை ஏய்க்கிறான்இவன்.!

விசச்சிலந்தி

வல்வை சுஜேன்
மெத்தை வலை விரித்து !
செவ்வான ஒளி நின்று !
விழி மெளசால் அழைக்கிறாள்!
சிகப்பு விழக்கின் விசச் சிலந்தி !
ஆறடி அழகுற்றவரின்!
சிலுமிச சிருங்காரங்களில் !
கைத்தொலை நகலாய்!
இதழ் முத்த ஈரத்தில் நனைந்து!
ஆட்டோக்கிராப் நாயகர்கள்!
சீட்டுக்கட்டு ராஜாக்களாய் !
இவளிடத்தில் !
முந்தானை வைப்பகத்தில் !
கூட்டுக் குடும்பம் நடத்தும்!
பண நோட்டுக்களோடு!
நாத்து மேட்டு நீர் தெளிப்பில் !
உயிரணுக்கள் இவளுக்குள்ளே !
உயிர் கொல்லி எய்ட்ச்சை பிரசவித்து !
மரண வலை விரித்து!
மெளனித்து காத்திருக்கிறது!
விட்டில்களே வீழ்ந்து விடாதீர் !
மெத்தை வலையில் விசச் சிலந்தி

காதல் சிற்ப்பங்கள்

வல்வை சுஜேன்
நிலவே நிலவே கொஞ்சம் நில்லு!
உன் காதலன் போல் !
என் ஆதவனும் !
அவனை கண்டால் சொல்லு !
கண்ணே கண்ணுக்கு எய்யுமா அம்பு!
கசிந்துருகும் இதையத்தை!
கவர்ந்தீர்க்கும் காந்தம் அது !
ஊடலும் கூடலும் காதலின் ஊத்து!
ஒளி முகத் தேர்வும்!
இருள் முக மறைவும்!
மாதாந்த காதல் வகுப்பு !
பந்தி விரித்தவள் இங்கிருக்கேன்!
பரிசம் போட்டவன் எங்கோ அறியேன்!
மாதங்களெல்லாம் சித்திரைக்குள்!
காண்டாவன கதிரில் !
கரைகின்ற நொடிக்குள்!
மகரந்த கொத்துக்களின் !
மத்தாப்புத் தூறலில் நனைந்தும்!
நிற்ப்பந்தக் கூர் முனையில் !
ஆகாத காதலென்று அலை மேவும் !
நேசத் துறவிகளால் !
இதையத்தை உளி அறுக்க!
உயிரற்ற சிலையாய் !
நிழலை தொடவும் முடியாமல்!
காலம் செதுக்கிய சிற்ப்பங்களோடு!
காதல் கோட்டையை அலங்கரிக்கிறேன். !

கட்டில் சிலந்தி

வல்வை சுஜேன்
கட்டில் சிலந்தி ஒன்று !
ஈமெயில் கொடுத்தது!
மெல்லத் திறந்தேன்!
செவ்வான ஒளி நின்று !
மெத்தை வலை விரித்து !
விழி மெளசால்!
சிருங்கார அழைப்பு விடுகிறாள் ஆளுக்கொரு பணத் தாலி கட்டி!
இவள் மேனியை புற்றெடுக்கும் !
காமக் கறையான்களால்!
உயிரணுக்கள் இவளுக்குள்ளே !
செம்புத் தண்ணீர் ரோடு !
பஞ்சாயத்து பண்ணி!
உயிர் கொல்லி எய்ட்ச்சை!
நாத்து மேட்டில் விதைத்து!
நீர் தெளித்து !
மெளனித்து காத்திருக்கிறது !
இவளின் நாளைய மணவாளன்!
எய்ட்ச் எனும் கொடிய நாயகனே!
மரண மாலையோடு!
விரகதாப விசை புயலாய் !
மலர் மஞ்சத்தில் காத்திருக்கிறான் !
அந்த மரண தேவன் !
முந்தானை வைப்பகத்தில் !
இவள் நோட்டுக் கட்டுகளை !
எண்ண எண்ண!
இவளின் ஆயுள் காலங்கள் !
கழிக்கப்படுகின்றன!
விட்டில்களே வீழ்ந்து விடாதீர் !
மெத்தை வலையில் விசச் சிலந்தி

தாயகத் தாகம்

வல்வை சுஜேன்
விழியில் இருந்து குருதி வழிந்து!
விடியல் தொலைத்த உறவே!
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று எரிக்கும்!
பொல்லாங்கு உலகை வெறுத்துவிடு !
இல்லாதோர் இவரென்றே!
நலிந்தோரை வதை செய்து!
நலன் கெட புழுதியில் வீசிவிட்டு!
ஜனநாயக நிலையாளர் !
இலங்கை அரசென்றே!
பொன் முடி சூடி கொடுக்கிறது !
இராணுவ வதைகளின் கெடுபிடி அதனுள்!
நாம் உதிரம் சொரிவதை இகழ்ந்தாரே!
காமுகர் வதைகளில் கற்பினை இழந்து!
மடிந்திடும் மலர்களை மறந்தாரே!
முடமாய் யடமாய் முள் கம்பி சிறைக்குள் !
உழலும் வாழ்வையும் உளம் கனிந்தே!
உயர் காப்பு வளையமென்றே உரைத்தாரே !
புத்தன் பிறந்தான் பூமியில் ஓர் நாள்!
அது அன்பின் அடையாளம் !
எம் பூமியில் புத்தன் !
புதிதாய் முளைப்பதெல்லாம்!
சிங்கள எத்தரின் வெறியாட்டம்!
அமைதிப் பேச்சு அகிலம் நகைக்க !
ஆயிரம் பொய்யாச்சு !
அகதி வாழ்வு நியதி அல்லவே தமிழா!
அடிமை கூண்டை உடைத்துவிடு!
உயிரினும் மேலாம் உன் தேசம் உயர்ந்திட!
உன் உயிரை திருப்பிக் கொடுத்துவிடு !
வேட்டொலி கிடந்த யாழிசை நரம்பில்!
பாட்டொலி பிறக்கலையா!
எம்மை வாட்டிய கோட்டையில்!
புலிக்கொடி பறந்து பட்டொலி வீசலையா!
ஆனை இறகிலே ஆற்றிய போரினில் !
ஆயிரம் தலை பறித்தோம்!
ஆளும் அரசுக்கே சன்மான பேளையில்!
அனைத்தும் கொடுத்து வைத்தோம் !
கோட்டை கோட்டையாய் இனி நாம் பிடிப்போம்!
எங்கள் கோணமாமலையிலும் கொடி வைப்போம்!
விண்ணையும் மண்ணையும் கடலையும் ஆண்ட!
நிலவே நீயும் வந்துவிடு!
சத்திய சோதனை எதுவானாலும்!
வெல்வோம் வெல்வோம் தமிழீழம்!
அன்றே தணியும் எங்கள் தாயகத் தாகம்

வாடகை கூடு!

வல்வை சுஜேன்
வாடகை கூடு தான்டா சாமி – அட!
வாழ்ந்துதான் பார்த்தேன் சின்னச்சாமி!
இதயம் துடித்ததடா சில நாள்!
இன்னும் உயிரோடு வாழ்கிறேன் அதனால்!
கருவறை கோயிலில் வைத்தவளோ!
காலன் அளைத்தே கண் துயின்றாள்!
கருணை நிழல் தந்தவனோ!
இனத்தீ அலையிலே தகனமுற்றான்!
இளப்பதெல்லாம் இளந்துவிட்டு!
இருக்குதையா இன்னும் உசிரு!
புத்தபகவானே உன் போதனை வீணாச்சே!
வெள்ளரச மரத்திலே வேதாளம் ஆடுதிங்கே!
தாய் மண்ணை ஏடாக்கி அகரம் எழுதியவன் நான்!
தாயக விடிவிற்கே தமிழ் பால் குடித்து வந்தேன்!
இனத் தீ சங்காரம் இன்னும்தான் ஓயவில்லை!
கனலான ஈழமே நதியாக நான் வாறேன்!
நஞ்சு மாலை கழுத்தணிந்து!
கந்தகத்தை வண்டி கட்டி!
வாடகை கூட்டை!
தாய் நாட்டுக்கே தந்துவிட்டேன்!
அண்ணனை போலொரு ஆண்டவன் இல்லையடா!
உரம் தந்து வரம் தந்து நிழல் தந்த சாமியவன்

ஆண்டவன் தேடும் ஆலயம்!

வல்வை சுஜேன்
ஆசை மன வாசலிலே!
ஆடும் ஊஞ்சல் நூலினிலே!
இழுக் கெலாம் இளையேற்றி!
இறை அடி தேடும் நெஞ்சே!
உன் வெண் மன கோயிலிலே!
அழுக்கேறி இருள் இருக்க!
நீ வடித்த கோபுர கூண்டுக்குள்!
இறை வாழ குடி புகுவேனோ!
பணம் வேண்டேன் பால் வேண்டேன்!
பஞ்சாமிர்த சுவை வேண்டேன்!
நிறம் மாறா பால் மனம் என்றால்!
நிதம் வாழ்வேன் நிழலாக உன்னிடத்தில்!
அடியும் முடியும் தேடு!
ஆள் மனசில் ஆசை வார்க்காதே!
பொய் சுமந்த தாழம் பூவானால்!
புறையோடி பூநாகமே குடி புகும்!
மனம் எனும் கோயிலிற்குள்!
மிதவாத முள் எதற்கு!
உன் வெறி கொண்ட வேள்வியில்!
தறி கொண்டோடுதே நிறம்மாறா குருதி!
நதியாகி நானித்து!
ஆலயங்கள் நீ வளர்த்து!
அதில் ஆராதனை ஒளி வளர்த்து!
தாளிட்ட கதவுக்குள் சிறையிட்டு!
சிதைக்கிறாய் சிலையிருத்தி என்னை!
சிரிக்கிறேன் நான் நீ வடித்த கோயிலில்!
அல்லா என்றும் யேசு என்றும்!
ஈசன் என்றும் புத்தன் என்றும்!
இன்னும் எத்தனையோ வடிவங்களில்!
உள்ளக் கோயிலை தூய்மையாக்கு!
இல்லார்க்கு ஈர்ந்து கொடு!
பூசைக்குகந்த புஸ்பங்களாய்!
ஆட் கொள்வேன் உமை ஆராதனை வேளை!
நான் தேடும் ஆலயம் வெண் இதயமே.!