காதல் சுகம்தான்...
வாழ்க்கையை வென்றவர்க்கு
காதல் சுகம்தான்.
ஆனால் இங்கே வயதையும்
வாழ்க்கையையும்
காதலுக்கென்று விற்று விட்ட
ஒரு கூட்டம்
காதல் சுகமென்றும், மற்றொரு கூட்டம்
காதல் சுடுமென்றும் சொல்லித் திரிகிறது
குடும்பத்தையும் நாட்டையும் தாங்கி
நிற்க வேண்டிய வலிமைத் தூண்கள்
முதுகெலும்புகளை களவு கொடுத்துவிட்டு
முகத்தில் முள் முளைக்க விட்டிருக்கிறார்கள்
காதல் தோல்வியாம்...
பூகம்பம் நிகழ்த்தப் பிறந்த இளைஞர்கள்
பூக்கள் மோதி உடைந்து போகிறார்கள்
கல்யாணத்திற்கு எதிராகவே பலர்
காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்
அந்த உள்ளங்களின் எதார்த்தம்
வெறும் இனக்கவர்ச்சியின்
இன்னொரு முகமாகிப் போனது
வாழ்க்கையின் அந்த வெயில் மறைவுப்
பிரதேசம் நமக்கு வேண்டாம் நண்பா.
உன் கனவுகளை கையெறி குண்டுகளால்
காயப்படுத்திய என்னைக் கண்டிக்கும் முன்
காதலித்துப் பார் என்று கத்திக் கொண்டிருக்கும்
கவிஞர்களை நகர்ந்து நிற்கச் சொல்.
இப்படி வா...
நாம் முதலில் வாழ்க்கையை
வாழ்ந்துப் பார்ப்போம்!
எட்வின் பிரிட்டோ