செங்கமல சிரிப்புல
சிந்தனைய செதச்சவளே
செங்காட்டு மண்ணுல
சேத்து என்ன மிதிச்சவளே
ஒன் மருதாணி கைவிரலு
மயக்கி என்ன இழுத்திருச்சு
மரிக்கொழுந்து வச்ச கொண்ட
மனசு தட்டி போட்டிருச்சு.
ஈசானி இருண்டப்போ,
இருவாட்சி பூத்தப்போ,
இசக்கி சமஞ்சப்போ,
இலந்த பழுத்தப்போ,
ஊத்து தண்ணிப் போல
உசுரு பூரா உன் நினப்பு.
ஒரு சோடி கொலுசால
மனசு அள்ளிப் போனவளே!
உன் கண்ணுக்கு மையா,
கண்டாங்கி நூலா,
கொசுவத்து மடிப்பா,
உங்கொப்பனுக்கு மருமவனா
ஆவதெப்போ ?

எட்வின் பிரிட்டோ