வெல்லத் தமிழினி தாகும்
மன்னார் அமுதன்
தமிழே ஆதித் தாயே நீயே!
தமிழர் போற்றும் சேயே, மாதா!
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்!
புலமை மிகுந்த தருவின் கனியே!
சொல்வதற் கரிய கனிமை - மொழியில்!
கொல்வதற் கரிய உயிர்மை - போரால்!
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை!
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை!
இலக்கிய நகைகளை அணிவாள் - படைப்பில்!
இலக்கணப் புன்னகை மலர்ப்பாள் -ஆக்கச்!
சிறப்பினை ஓசையால் உரைப்பாள் -கேட்போர்!
உள்ளத்தை மெதுவாய்க் கரைப்பாள்!
நல்லோர் நாவில் சரசம் புரிவாள் !
நல்மனத் தோர்க்கெலாம் கலசம் அருள்வாள்!
வன்மங்கள் கண்டு பொங்கியே எழுவாள்!
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினைப் பொழிவாள் !
கயல்விழி மாதர் அழகெலாம் அழகா!
கண்டவர் மேற்கொளும் காதல் நிலையா!
இயலிசை, நாடகம் மூன்றையும் உயிராய்க்!
கொண்டவர் சிறப்பே என்றும் அழியா!
தமிழினி அழிந்தே போகும் - எனும்!
தறுதலைத் தலைமைகள் வேகும் தீயில்!
மடமைக் கருத்துக்கள் மாண்டே போகும்!
மாரித் தவளைகள் கத்தியே ஓயும்!
தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் - கற்றால்!
தளரவே மாட்டாய் மூப்பால் - சிறிதாய்!
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் - நாளை !
நீயும் சுரப்பாய் கவிப்பால்!
குழலிசை தனிலும் இனிமை - எங்கோ!
குழந்தையின் நாவில் உயிர்மெய் -சில!
மடந்தையர் கொஞ்சும் மொழிபொய்-இந்த!
மடமையை அழித்தே தமிழ்செய்!
மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்!
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்!
உலகையே செம்மொழி ஆளும்!
உவப்புநாள் விரைவிலே கூடும்!
வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்!
வெகுவான கலைச் சொற்கள் கூடும்!
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்!
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்!
செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு!
எருவாக மாண்டே தான் போகும்- எனும்!
கள்ளத் தலைவர் தம்மெண்ணங்கள் மாறும்!
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்!
சுட்டாலும் தமிழெமக்குத் தெரியாதென்றோர்!
சுடு பட்ட புழுவாக துடித்தே வாழ்வீர்!
நட்டாலும் நேரான மரமாய் வழர்வீர்!
நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனைத் தாரீர்!
சோதர மொழிகள் கலவை யின்றி -நாளும்!
சோற்றிற் காய்த் தமிழைப் பேசும் காலம்!
நரம்பில்லா நாவிற்கு வந்தே தீரும் -மூடா!
நம்செவிகளிலே தேனாறாய்ப் பாயும்!
வீட்டிற்கு ஒருவர்க்குத் தறிகள் தந்து!
பாட்டிற்கு அத்தறியில் கவிதை நெய்வோம்!
மாட்டிற்கே தமிழுணர்வு வந்த நாட்டில் தமிழறியா!
மாடென்று உமையேச மனசே வெட்கும்