என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள்
குடிகொள்கின்றன
பறவைக்கூடுகளால்
ஆக்கப்பட்ட கூடென
எத்தனை பெருமையெனக்கு
அதிரும் வீடு
இடையற்ற படபட
சிறகடிப்பில்
மொழிமீறிய
தீராத உரையாடலில்
பறவைகளின் அன்பளிப்பென
சேமித்து வைக்கிறேன்
கழன்றுவிழும் சிறகுகளை
சிறகு முளைத்த நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும் வீடு
ஒரு நாள்
பூமியின் ஈர்ப்பை
இலகுவாய் உதறி
காற்றின் கரம்பற்றி
அந்தரவெளியில் தாவியேறும்
நான் காத்திருக்கிறேன்
பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும்
அந்த ஒற்றைச் சிறகுக்காக
கோகுல கண்ணன்