வெடிகுண்டு சம்பவத்தில் சிக்கி சிதறிய தீவிரவாதியின் குழந்தை பற்றி
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் உருக்கமான கவிதை :
விண் முட்டும் மாளிகைகளை
வியந்து நோக்கியவாறு -
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த
குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு
நடக்கிறாள் அந்த நங்கை.
குழந்தை அவள் இடுப்பில் இருந்தவாறு
வீதியோரத்துக் கடைகளில் அழகுற அடுக்கப்பட்டுள்ள
விளையாட்டுப் பொம்மைகள் மீது விழியோட்டி -
விரலையும் நீட்டி -
"அதோ! அதோ! அதை வாங்கிக் கொடு!''
என்று பிடிவாதம் செய்கிறது.
"அப்பா நாளைக்கு வந்து விடுவார்,
வந்தவுடனே வாங்கித் தருவார்;
இப்போ வாயை மூடிக்கிட்டு இரு''
என்று அந்த இளந்தாய்
கண்டிப்பான குரலில் - கனிவும் கலந்து;
"கண்ணு இல்லே! இப்ப அடம் பிடிக்காம சும்மா இரு!''
குழந்தை சமாதானம் அடைவதற்குப் பதில்
கோபம் கொள்கிறது!
குழந்தையின் கோபம்
அழுகையில்தானே கொண்டு போய் விடும்!
அழுகிறது - அம்மா அரவணைப்பு பலிக்கவில்லை!
அதட்டலும் எடுபடவில்லை.
வீறிட்டு அலறுகிறது - அந்த
வீதியே அதிரும் அளவுக்கு அலறுகிறது.
அம்மாவுக்கு கோபம் தாங்கவில்லை.
குழந்தையை வீதியிலே இறக்கி விட்டு;
"இங்கேயே நின்னு அழு;
நாளைக்கு உங்க அப்பன் வரும் வரையில்
அழுதுகிட்டே இரு!
அவர் வந்து பொம்மை வாங்கிக் கொடுப்பார்''
ஆத்திரம் பொங்கிட அம்மா நடக்கத் தொடங்கினாள்!
"ஆபத்து! ஆபத்து!
அந்தப் பக்கம் போகாதீர்கள்! போகாதீர்கள்!
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு
அங்கேதான் இருக்கிறது!''
ஒலிபெருக்கியில் அந்த எச்சரிக்கை முழங்கிடவே;
அந்த இளந்தாய், ஒலி வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்.
தீயை மிதித்தது போல் ஓர் அதிர்ச்சி; -
வெளியூருக்குப் போவதாக விடைபெற்றுச் சென்ற கணவன் ;
"திரும்பும் போது தீவிரவாதியாகத் திரும்புவேன்'' என்று
முரட்டுக் கர்ச்சனை செய்தது இப்போது அவள்
மூளையைக் கலக்கிற்று.
நினைவுத் தடத்திலிருந்து அவள் மாறுவதற்குள் -
பயங்கர சப்தம்!
இடி முழக்கம்!
மின்னல் போன்ற தாக்குதல்!
அந்த வீதியே மனித உடல்களால் -
அதுவும் சிதைந்த உடல்களால் நிரம்பியது -
வீதியோரத்துக் கடைகள் எரிந்து கொண்டிருந்தன -
இளந் தாய்
இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
விளையாடுவதற்கு பொம்மை கேட்டு அழுத குழந்தை
வெடித்துச் சிதறி;
அந்தத் தாயின் மீது
ரோஜா இதழ்களைப் போல
உதிர்ந்து கிடந்த காட்சியை;
அங்கு ஓடிவந்த ஒருவன் உற்றுப் பார்த்தான் -
"ஓ''வெனக் கதறினான் -
ஆம்; அவன்தான் வெளியூர் சென்றிருந்த அவள் கணவன்!
அந்தக் குழந்தையின் தந்தை -
தீவிரவாதிகளுடன் திட்டம் தீட்டி விட்டு; அந்தத்
திட்டத்தை இப்போது நிறைவேற்றி விட்டான் -
குழந்தையின் சிதறிய உடலும் -
அவன் மணந்த அந்தக் கோகிலத்தின் முகமும் -
"இப்போது திருப்தி தானே!''
என்று அவனைப் பார்த்துக் கேட்பது போல இருந்தது
தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி