சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரே-ஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…
கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..
- கீதா (geeths.info)
கீதா