பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
மன்னார் அமுதன்