தேடுகின்ற கண்களுக்கு தென்றல் போல்
வந்து போகும் உறவுகள்...
கட்டிலில் உறவாட தொட்டிலில் இசை பாட...
தொடந்து வரும் தொப்புள் கொடி உறவு...
மண்ணில் விழுந்த விதைக்கு...
மழைத் துளி உறவு...
படரும் கொடிக்கு போடும்
பந்தல் உறவாகுமா? வேலி உறவாகுமா?
சும்மா கிடந்த கொட்டாங்கச்சிக்கு - அதற்கு
பிடி வைத்து அகப்பை ஆக்கிய ஆசாரிக்கு
அவன் தொழில் உறவாகுமா?
அதை விற்கும் பணம் உறவாகுமா?
கல்மேல் உளி வைத்தால்...
சிலைக்கு வலிப்பது இல்லை...
உளிக்கும் வலிப்பது இல்லை - அவன்
அடித்து செதுக்கும் கைகளுக்கு வலிக்கும்...
அது தெய்வ சிலையாகிவிட்டால் - அதை
வணங்க கைகள் மறுப்பது இல்லை...
அடி வாங்கிய வலியை நினைப்பது இல்லை...
பத்து பிள்ளை பெற்றாலும் - தகப்பன்
அவன் முதல் எழுத்தை தர மறுப்பது இல்லை...
ஒவ்வொரு வியர்வைத் துளியைச்
சிந்தியதை நினைப்பது இல்லை...
தாய் கருவறையைத் தனி தனி இடமாக
ஒதுக்குவது இல்லை...
பாசத்தைப் பிரித்துக் கொடுப்பது இல்லை...
பெருக்கி கொடுக்கிறாள் - சில நேரங்களில்
சில பிள்ளைகள் தராசும் எடை போடும்
கல்லாக மாறி விடுகிறார்கள்
மணிமேகலை