என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை
மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.
மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.
வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?
வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.
குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.
தின வடங்கிற்றா?
தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.
அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.
படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்
கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."
சு. வில்வரெத்தினம்